திருட்டு மின்சாரத்தில் ஓசியில் நாய்க்கு ஏசி: பலே ஆசாமியிடம் அள்ளியது மின்துறை

நவி மும்பை: மும்பையைச் சேர்ந்த செல்வந்தர் ஒருவர் பல வெளிநாட்டு நாய்களை செல்லப் பிராணிகளாக தனது வீட்டில் வளர்த்து வருகிறார். அந்த நாய்களை மிக சொகுசாக வளர்க்க விரும்பிய அவர், தனது வீடு முழுவதும் ஏ.சி. வசதியை செய்தார். அந்த ஏ.சி. இயந்திரங்கள் 24 மணிநேரமும் குறிப்பிட்ட அளவு குளிரை கொடுக்கும் வகையில் அவர் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், ஏ.சி. இயந்திரங்கள் செயல்பட அந்த செல்வந்தர் திருட்டு மின்சாரத்தைத்தான் பயன்படுத்தி வந்தார். மின்சார வாரிய ஊழியர்களுக்கு தெரியாமல் நூதனமான முறையில் அவர் ஏ.சி. வசதிக்கு திருட்டு மின்சாரத்தை பயன்படுத்தி வந்துள்ளார். இதுபற்றி அண்மையில் மகாராஷ்டிரா மாநில மின்சார விநியோக கம்பெனி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அதிகாரிகள் அந்த செல்வந்தரின் வீட்டில் சோதனை நடத்தி 34,465 யூனிட் மின்சாரம் இதுவரை திருடப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். இதுகுறித்து மின்சார விநியோக கம்பெனி அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: வளர்ப்பு நாய்கள் சொகுசாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்த நபர் 24 மணிநேரமும் குறிப்பிட்ட டெம்ப்ரச்சரில் ஏ.சி. இயந்திரங்கள் இயங்கும் வகையில் ஏற்பாடு செய்து வைத்திருந்தார். இதற்கு திருட்டு மின்சாரத்தை பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. அவரது வீட்டில் சோதனை நடத்தி 34,465 யூனிட் மின்சாரம் திருடப்பட்டிருப்பது கண்டுபிடித்தோம். மேலும், இதுவரை திருடிய மின்சாரத்துக்கு அபராதமாக அவரிடம் இருந்து ₹7 லட்சம் வசூலிக்கப்பட்டது என்றார்.

Related Stories: