கொரோனா சிகிச்சைக்கான செலவையும் ஏற்கும் மருத்துவ பாலிசிகளை கொண்டு வருக...காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஐஆர்டிஏ அறிவுறுத்தல்!

டெல்லி: கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ஆகும் செலவுகளையும் ஏற்கக்கூடிய வகையிலான மருத்துவ காப்பீடு பாலிசிகளை பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு காப்பீட்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டிருக்கும் சுற்றறிக்கையில், கொரோனாவால் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆகவே கொரோனா பாதிப்பு சிகிச்சைக்கு ஆகக்கூடிய செலவுகளையும் ஏற்கக்கூடிய வகையிலான பாலிசிகளை காப்பீட்டு நிறுவனங்கள் வடிவமைத்து விரைந்து நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெறுவோருக்கு ஆகும் செலவை ஏற்கும் வகையிலான பாலிசிகளில் கொரோனாவையும் சேர்க்க வேண்டும் என மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாரத ஸ்டேட் வங்கியின் பொது காப்பீட்டு நிறுவன தலைவர் சுப்பிரமணியம் பிரம்ம ஜோய்ஷ்லா, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் 24 மணி நேரமாவது அனுமதிக்கப்பட்டிருந்தால் தான் அதற்கான செலவை காப்பீட்டு நிறுவனங்கள் ஏற்க இயலும் என்று கூறியுள்ளார். ஆனால் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள், புறநோயாளிகளுக்கான செலவை சேர்ப்பதில்லை என்றும், அவர் தெரிவித்திருக்கிறார். கொரோனா வைரஸ் ஒரு நோற்றுநோய் என்று உலக சுகாதார அமைப்போ அல்லது இந்திய அரசோ அறிவித்தால் அதற்கான செலவை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றும், சுப்பிரமணியம் கூறியிருக்கிறார். இதனை தொடர்ந்து, கொரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக கைகளை சுத்தப்படுத்துவதற்கான கிருமி நாசினி தயாரிப்பை நிறுவனங்கள் அதிகரித்துள்ளன.

கொரோனா தோற்று பரவாமல் தடுக்க அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். இந்நிலையில் சில எப்.எம்.சி.ஜி. நிறுவனங்கள் நுகர்வோரை தொடர்பு கொண்டு கிருமி நாசினியை கொண்டு கைகளை அடிக்கடி கழுவுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பரவி வரும் சூழலில் போதுமான அளவிற்கு ஹாண்ட் சானிடைசர்கள் கையிருப்பில் இருப்பதாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கிருமி நாசினிகளின் ஜெல்களை தயாரிப்பை அதிகரித்திருப்பதோடு இந்த பொருட்களை விற்க விற்பனையாளர்களை ஊக்குவிப்பதாக கோத்ரெஜ் கன்ஷியூமர் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி சுனில் கட்டாரியா தெரிவித்துள்ளார்.

Related Stories: