ரஞ்சி கோப்பை பைனலில் சவுராஷ்டிரா

ராஜ்கோட்: ரஞ்சி கோப்பை  அரை இறுதியில் குஜராத் அணியை 92 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய சவுராஷ்டிரா அணி பைனலுக்கு முன்னேறியது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் சவுராஷ்டிரா 304 ரன், குஜராத் 252 ரன் எடுத்தன. 52 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய சவுராஷ்டிரா 274 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, 327 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் 4ம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு  7 ரன் எடுத்திருந்தது. கடைசி நாளான நேற்று அந்த அணி 234 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்து 92 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

கேப்டன் பார்திவ் படேல் 93ரன் (148 பந்து, 13 பவுண்டரி), சிராக் காந்தி 96 ரன் (139 பந்து, 16பவுண்டரி) விளாச, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். சவுராஷ்டிரா கேப்டன் ஜெய்தேவ் உனத்காட் 22.2 ஓவரில் 11 மெய்டன் உட்பட 56 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். சவுராஷ்டிரா தொடர்ந்து 2வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. சவுராஷ்டிரா 2வது இன்னிங்சில் 139 ரன் விளாசிய வாசவதா ஆட்ட நாயகன் விருது பெற்றார். ராஜ்கோட்டில் மார்ச் 9ம் தேதி தொடங்கும் இறுதிப் போட்டியில்  பெங்கால் - சவுராஷ்டிரா அணிகள் மோதுகின்றன.  

Related Stories: