ஏப்.1 முதல் செப்.30 வரை மேற்கொள்ளப்பட உள்ள என்பிஆர் குறித்து மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை: உள்துறை அமைச்சர் தகவல்

புதுடெல்லி: வரும் ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி செப்டம்பர் 30ம் தேதி வரை மேற்கொள்ளப்பட உள்ள தேசிய மக்கள் தொகை பதிவு குறித்து மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. தேசிய மக்கள் தொகை பதிவு (என்பிஆர்) கணக்கெடுப்பு கடந்த 2010ம் ஆண்டு 2011ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்புடன் இணைந்து நடத்தப்பட்டது. பின்பு கடந்த 2015ம் ஆண்டில் வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தி என்பிஆர் விவரம் புதுப்பிக்கப்பட்டது. அப்போது பொதுமக்களின் ஆதார் மற்றும் செல்போன் எண் விவரங்களும் கேட்கப்பட்டன.

இந்த ஆண்டு வரும் ஏப்ரல் 1ம் தேதி நடத்தப்பட உள்ள என்பிஆர் கணக்கெடுப்பின்போது ஓட்டுனர் உரிமம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான தகவல்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் என கூறப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மக்களவையில் இது தொடர்பான கேள்விக்கு, மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த பதிலில், ‘‘தேசிய மக்கள் தொகை பதிவு குறித்து மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த தொடங்கிவிட்டது. ஒவ்வொரு குடும்பம் அல்லது தனி நபர்களின் மக்கள் தொகை விவரம் தேசிய மக்கள் தொகை பதிவின்போது மேம்படுத்தப்படும். இந்த கணக்கெடுப்பின்போது எந்த ஆவணங்களும் மக்களிடம் இருந்து பெறப்படாது’’ என்றார்.

இது தொடர்பாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், `‘தேசிய மக்கள் தொகை பதிவு குறித்த கணக்கெடுப்பு வரும் ஏப்ரல் 1ம் முதல் செப்டம்பர் 30 வரை நடத்தப்படும். என்பிஆர் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பை நாடு முழுவதும் மேற்பார்வையிடும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையாளர் விவேக் ஜோஷி அனைத்து மாநில முதல்வர்களையும் சந்தித்து என்பிஆர் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பார்’’ என்றனர்.

Related Stories: