இலவச ஆன்லைன் ஊடகங்களால் பாதிப்பு 85 ஆண்டுகள் சேவையாற்றிய ஆஸி. செய்தி நிறுவனம் மூடல்

மெல்போர்ன்: 85 ஆண்டு கால செய்தி சேவையில் இருந்து விலகுவதாக ஆஸ்திரேலியன் அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் பிராந்திய, தேசிய மற்றும் உலகளவிலான செய்திகளை நாளிதழ், தொலைக்காட்சி, டிஜிட்டல் என்ற பல்வேறு கோணங்களில் கடந்த 1935ம் ஆண்டு முதல் வழங்கி வந்த செய்தி நிறுவனம், ‘ஆஸ்திரேலியன் அசோசியேட்டட் பிரஸ்’ (ஏஏபி). அண்மையில் இச்செய்தி நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கை அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

அதில், பெருகி வரும் இலவச ஆன்லைன் ஊடகங்களை சமாளித்து தொழில் நடத்த முடியாததால், தனது 85 ஆண்டு கால செய்தி சேவையை மூடுவதாக அறிவித்துள்ளது. இதன் செய்தி வழங்கும் பிரிவு வரும் ஜூன் 26ம் தேதியுடனும், உதவி ஆசிரியர், வர்த்தக அனிமேஷன் பிரிவுகள் வரும் ஆகஸ்ட் மாதத்துடனும் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இதில் தற்போது பணியாற்றி வரும் 180 பேர் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஏஏபி செய்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாகத் தலைவர் புரூஸ் டேவிட்சன் கூறுகையில், ``செய்தி பிரிவு, உதவி ஆசிரியர், அனிமேஷன் உள்ளிட்ட ஏஏபி.யின் அனைத்து பிரிவுகளையும் மூடுவது என்பது மிகவும் கடினமான முடிவு தான்.

ஆனால், இதில் பணியாற்றிய சிலருக்கு நியூஸ் கார்ப், 9 நியூஸ் உள்ளிட்ட தொலைக்காட்சி சேனல்களில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது,’’ என்றார். `தொழில் ரீதியாக ஆராய்ந்து செய்திகளை அளித்து வந்த ஏஏபி செய்தி நிறுவனத்துக்கு பதிலாக, ஆராயாமல் உண்மையான செய்தி என்ற பெயரில் தவறான தகவல்களை அளிக்கும் ஆன்லைன் ஊடகங்கள் செய்தி அளிக்க உள்ளன’ என்று ஏஏபி செய்தி நிறுவனத்தின் சேர்மன் கேம்பெல் ரீட் தெரிவித்தார்.

Related Stories: