விடுமுறையின்றி பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு விமான பயணம்: சிவகாசி அரசு பள்ளி ஹெச்.எம். அசத்தல்

சிவகாசி: விடுமுறை எடுக்காமல் பள்ளி வந்த 20 மாணவ, மாணவிகளை தனது சொந்த செலவில் விமானத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார். விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஒன்றியம் மங்கலம் கிராமத்தில் அரசு தொடக்க பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்  படிக்கின்றனர். இங்கு 5ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஒரு சிலர் அடிக்கடி விடுமுறை எடுத்துள்ளனர். இவர்களுக்கு பள்ளிக்கு வரும் ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கில், தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன், விடுமுறை எடுக்காமல் மாணவர்கள் பள்ளிக்கு வந்தால் தனது சொந்த செலவில் சென்னைக்கு சுற்றுலா அழைத்து செல்வதாகவும், சென்னையில் இருந்து மீண்டும் சிவகாசிக்கு விமானத்தில் அழைத்து வருவதாகவும் 4 மாதங்களுக்கு முன்பு தெரிவித்துள்ளார்.

இதன் பின் ஒரு சில மாணவர்களை தவிர 5ம் வகுப்பில் படிக்கும் அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு விடுமுறை எடுக்காமல் வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன் 5ம் வகுப்பு படிக்கும் 20 மாணவ, மாணவிகள்,  4 ஆசிரியர்களை கடந்த வாரம் சென்னைக்கு ரயிலில் சுற்றுலா அழைத்து சென்றார். அங்கு பல இடங்களையும் மாணவர்களுக்கு சுற்றிக் காட்டி சிவகாசிக்கு திரும்பும்போது மதுரைக்கு விமானத்தில் மாணவர்களை அழைத்து வந்துள்ளார். இதுகுறித்து தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன் கூறுகையில், ``மாணவர்களை ஊக்குவிப்பதற்காக, சுமார் ரூ.1 லட்சம் செலவில் 5ம் வகுப்பு படிக்கும் 20 மாணவ, மாணவிகள் மற்றும் 4 ஆசிரியர்களை சென்னைக்கு ரயிலில் அழைத்து சென்றேன். பின் சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் அழைத்து வந்தேன். மாணவர்களின் உற்சாகத்தை கண்டு வியப்படைந்தேன்’’ என்றார்.

Related Stories: