சென்னையில் பத்மாவதி கோயில்கட்ட திருப்பதி தேவஸ்தானம் 3.92 கோடி நிதி: 2020-21 பட்ஜெட் தாக்கல்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ள திருமலை அன்னமய்யா பவனில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு பட்ஜெட்  கூட்டம் தலைவர் சுப்பா ரெட்டி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த  அறங்காவலர் குழு  கூட்டத்தில் ₹3,309 கோடி வரவு செலவுடன் கூடிய  2020-21ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை அறங்காவலர் குழு முன்னிலையில் தேவஸ்தானம், தாக்கல் செய்தது. பின்னர் இது குறித்து அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி கூறியதாவது: ஏழுமலையானின் உண்டியல் வருவாய் ஆண்டிற்காண்டு பெருகுவதுபோல் தேவஸ்தானத்தின் நிதிநிலை அறிக்கையும் ஆண்டிற்காண்டு உயர்ந்து வருகிறது.  அதன்படி இந்தாண்டு ₹3,309 கோடியில் நிதிநிலை அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் உண்டியலில் இருந்து கிடைக்கும் காணிக்கைகள் மூலம் வரும் நிதி ஆண்டிற்கு ₹1,315 கோடி வருவாய் கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.  

அரசு மூலம் செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களுக்காக ₹50 கோடி, கல்விக்காக ₹142 கோடி, மருத்துவம் மற்றும் சுகாதாரத்திற்காக ₹180 கோடி, பாதுகாப்புத்துறைக்காக ₹189 கோடி, தேவஸ்தானம் நடத்தி வரும் மருத்துவமனைகளுக்காக ₹207  கோடி என நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையில் பத்மாவதி தாயார் கோயில் கட்ட ₹3.92 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் ஏழுமலையான் கோயில் கட்ட ₹4 கோடியில் ஒப்புதல் உள்ளிட்டவை அளிக்கப்பட்டது.அலிபிரியில் பாஸ்ட்டேக் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக முதல்வர் சிபாரிசுக்கு மரியாதையில்லை

திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்வதற்காக மதுரை மத்திய தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுந்தரராஜன் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சிபாரிசு கடிதத்தை பெற்று வந்தார். அந்தக் கடிதத்தை திருமலையில் உள்ள  கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி அலுவலகத்திற்கு கொண்டு சென்று வழங்கினார். ஆனால், ஆந்திரரா, தெலங்கானா மாநில பிரமுகர்களின் கடிதங்களுக்குத்தான் மரியாதை தரப்படும் என்று திருப்பி அனுப்பிவிட்டனர். இதேபோல்,  கோயில் பட்ஜெட் குறித்த தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி கூட்டத்தில், தமிழ் ஊடகத்தினர் யாரையும் அனுமதிக்கவில்லை.

Related Stories: