ஏ... புடி... புடி... புடி... விமானத்தில் புறா வேட்டை

ஜெய்பூர்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நோக்கி நேற்று முன்தினம் மாலை 6.15 மணிக்கு கோ ஏர் விமானம் புறப்பட இருந்தது. அனைத்து பயணிகளும் ஏறிய பிறகு, விமானத்தின் கதவுகள் மூடப்பட்டன.  விமானம் புறப்பட தயாரான நிலையில், பயணிகள் பெட்டி வைக்கும் இடத்திலிருந்து திடீரென ஒரு புறா பறந்து வந்தது. அந்த புறா, விமானத்திற்குள் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு மாறி மாறி பறந்தது.அதைப் பார்த்த பயணிகள், புறா தங்கள் தலையில் தட்டிவிடுமோ என கூச்சலிட்டபடி குனிந்தனர். சில பயணிகள் அதை பிடிக்க முயற்சித்து தோல்வி அடைந்தனர். இதனால் விமானத்திற்குள் ஒரே களேபரமானது. இறுதியில் விமான கதவுகளில்  ஒன்று திறந்துவிட்டபிறகு புறா வெளியே சென்றது.

இதனால் விமானம் புறப்படுவதில் அரைமணி நேரம் தாமதம் ஏற்பட்டது. விமானத்திற்கு புறா பறந்தது தொடர்பாக பயணி ஒருவர் எடுத்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த  புறா, எப்படி விமானத்திற்குள் வந்தது என்பது தெரியவில்லை. பொதுவாக விமானத்திற்குள் பறவைகள் நுழைவது அரிதான விஷயம். ஒருவேளை நடுவானில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருந்தால் பெரிய அளவில் விபத்துக்கும்  வழிவகுத்திருக்கும் என விமான பொறியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

Related Stories: