ஆரோவில்லில் 52வது உதய தினவிழா: நெருப்பு மூட்டி வரவேற்ற வெளிநாட்டினர்

வானூர்: ஆரோவில்லில் இன்று அதிகாலை 52வது உதய தினம் கொண்டாடப்பட்டது. இதனை வெளிநாட்டினர் மற்றும் ஆரோவில்வாசிகள் நெருப்பு மூட்டி வரவேற்றனர். தியானத்திலும் அவர்கள் ஈடுபட்டனர். ஸ்ரீ அரவிந்தரின் முக்கிய சீடரான அன்னை என்று அழைக்கப்படும் மீரா அல்போன்சாவின் முக்கிய கனவு நகரமாக விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்தில் இரும்பை, இடையன்சாவடி, பொம்மையார்பாளையம், குயிலாப்பாளையம், கோட்டக்கரை உள்ளிட்ட பகுதிகளின் மைய பகுதியில் ஆரோவில் அமைய வேண்டும் என்று முடிவு செய்தார்.

அதன்படி கடந்த 1968ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி ஆரோவில் மையம் அமைக்கப்பட்டு தொடர்ந்து பணிகள் நடந்து வந்தது. எந்த ஒரு நாட்டினரும், எந்த ஒரு மதத்தினரும் சொந்தம் கொண்டாட முடியாத வகையில் அனைவருக்கும் பொதுவான இடமாக ஆரோவில் இருக்க வேண்டும் என்று அன்னை விரும்பினார். அதன்படி ஆரோவில் அமையப்பெற்றது. இதன் முக்கிய இடமாக மாத்ரி மந்திர் தியானக்கூடம் அமைக்கப்பட்டது. மேலும் பாரத்நிவாஸ், அரவிந்தர் சிலை நிறுவப்பட்டுள்ள சாவித்திரி பவன் ஆகியவையும் தொடர்ச்சியாக அமைக்கப்பட்டது.

மாத்ரி மந்திர் அருகே ஆம்பி தியேட்டர் எனப்படும் திறந்தவெளி கலையரங்கம் உலக நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மண் மற்றும் செங்கற்கள் எடுத்து வரப்பட்டு கட்டப்பட்டது. ஆரோவில் மையம் உதயமாகி 52 ஆண்டுகள் ஆகிறது. இதனையொட்டி இன்று அதிகாலை 5 மணியளவில் 52வது உதயதினவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆம்பி தியேட்டர் எனப்படும் திறந்தவெளி கலையரங்கில் இன்று அதிகாலை 5 மணியளவில் ஆரோவில் உதயதினத்தை கொண்டாடும் வகையில் அதிகாலை முதலே வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் ஆரோவில் வாசிகள் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் என ஏராளமானோர் அங்கு கூடினார்கள். பின்னர் சூரிய உதயத்தின்போது அப்பகுதியில் நெருப்பு மூட்டி தியானத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆம்பி தியேட்டர் பகுதி முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

Related Stories: