டெல்லி வன்முறையைக் கண்டித்த நீதிபதியின் பணியிட மாற்றம் குறித்த காங்கிரஸ் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை: ரவிசங்கர் பிரசாத் பேட்டி

புதுடெல்லி: டெல்லி வன்முறையைக் கண்டித்த நீதிபதியின் பணியிட மாற்றம் குறித்த காங்கிரஸ் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை, என்று மத்திய சட்டத்துறை ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டங்கள் வன்முறையாக மாறி உள்ள நிலையில், கலவரத்தை கட்டுப்படுத்த கோரும் அவசர வழக்கை நேற்று நீதிபதி முரளிதர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது தலைநகர் டெல்லியில் 1984ம் ஆண்டை போல மீண்டும் ஒரு மத கலவரம் வெடித்துள்ளததால் நீதிபதி கண்டித்தார். கலவரத்தை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டதாக முரளிதர் கூறியிருந்தார். இந்த நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய கொலிஜ்ஜியத்தின் பரிந்துரை பேரில் பஞ்சாப்- ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்து மத்திய சட்ட அமைச்சகம் ஆணை பிறப்பித்துள்ளது. இதனால், நேற்று இரவோடு இரவாக நீதிபதி முரளிதர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து பஞ்சாப் அரியானா உயர்நீதிமன்றத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

அவர் மீதான திடீர் பணியிட மாற்ற நடவடிக்கை, தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், இது நீதித்துறை மீதான பாஜக அரசின் தலையீடு எனக் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள மத்தியச் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நீதிபதி பணியிட மாற்றத்துக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் பிப்ரவரி 12ம் தேதி பரிந்துரைத்திருந்ததைச் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இடமாற்றம் செய்யும்போது, சம்பந்தப்பட்ட நீதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டது. இந்த விவகாரத்தில், சட்டத்தில் கூறப்பட்ட அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டன. வழக்கமான பணியிட மாற்றத்தை அரசியலாக்கும் காங்கிரஸ் கட்சி, நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடுவதில் ஒரு சாதனையே படைத்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அதுமட்டுமல்லாது, பாஜக மீது ஆதாரமற்ற புகார்களை காங்கிரஸ் கூறுவதாக குற்றம்சாட்டியுள்ள அமைச்சர், கொலீஜியம் நடைமுறைப்படியே நீதிபதி முரளிதரர் மாற்றப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளார்.

Related Stories: