மத்திய அரசை தட்டிக் கேட்டால் பணியிட மாற்றம் செய்வீரா ? : அதிகார போதையில் மோடி அரசு செயல்படுவதாக காங்கிரஸ் சாடல்

டெல்லி : டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் பணியிட மாற்றம் விவகாரத்தில் மத்திய அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது. அதிகார போதையில் தலைகால் புரியாமல் மோடி அரசு நீதிமன்ற விவகாரங்களில் தலையிடுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. கலவரத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர்களை காப்பாற்றவே முரளிதரை பணியிடமாற்றம் செய்துள்ளதாக காட்சி கூறியுள்ளது. இன்னும் எத்தனை பேரை இதுபோன்று மோடி அரசால் பணியிடமாற்றம் செய்துவிட முடியும் என்பதும் காங்கிரசின் கேள்வி ஆகும்.

நீதிமன்றங்களை குறிவைப்பது மோடி அரசுக்கு இது ஒன்றும் புதிதல்ல என்றும் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரந்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், கலவர ஆதாரங்களை கொண்டு வழக்குப்பதிவு செய்ய நீதிபதி முரளிதர் உத்தரவிட்டு இருந்தார்.அதன் காரணமாக இரவோடு இரவாக அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.மத்திய பாஜக அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது.அதன்விளைவே நீதிமன்ற விவகாரங்களிலும் மோடி அரசு தலையிடுவதற்கு காரணம்.முரளிதர் பணியிட மாற்றம் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தார்.

பிரியங்கா காந்தி ட்விட்டர் வாயிலாக கடும் கண்டனம்

நீதிபதி முரளிதர் பணியிட மாற்றம் அதிர்ச்சி அளிப்பதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டர் வாயிலாக கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது ஒரு அவமானகரமான செயல் என்றும் நீதிமன்ற விவகாரங்களில் தலையிட்டு உண்மைகளை மறைக்கும் நடவடிக்கைகளில் மோடி அரசு ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories: