சகிப்புத்தன்மையை இழந்துவிட்டால் நமது நாட்டுக்கே அழிவு: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு

புதுச்சேரி: ‘சகிப்புத்தன்மையை இழந்துவிட்டால் நமது நாட்டுக்கே அழிவு’ என்று துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு பேசினார்.புதுச்சேரி  மத்திய பல்கலைக்கழகத்தில் 28-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்று பட்டங்களை வழங்கி  பேசியதாவது:  மாணவர்கள் கல்வி,  ஆராய்ச்சியில் முழு கவனத்தை செலுத்த வேண்டும்.  பல்கலைக்கழகத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டம் முக்கியமானது. வாய்ப்புகளை  ஏற்றுக்கொண்டு முன்னேறுங்கள். நேரத்தை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.  பழம்பெரும் தொழிலான விவசாயத்தை தெரிந்து கொள்ளுங்கள். உள்ளூர் மக்களின்  தேவைக்கு ஏற்ப கல்விக்கொள்கைகள் வடிவமைக்கப்பட வேண்டும். பணி வாய்ப்புகளை  உருவாக்கும் கல்வி அவசியம். பல்கலைக்கழகங்கள் கல்வி, ஆராய்ச்சி மூலம் கல்வி  புரட்சியை முன்னிறுத்த வேண்டும். உலகெங்கும் உள்ள புதிய வாய்ப்புகள்  மற்றும் புது முயற்சிகளுக்கான கதவையும், ஜன்னலையும் பல்கலைக்கழகங்கள்  திறக்க வேண்டும். உலக நாடுகளுக்கு சென்று பணிபுரியுங்கள், பொருள்  ஈட்டுங்கள், ஆனால் மீண்டும் திரும்பி வந்து தாய்  நாட்டுக்கு சேவை  செய்யுங்கள்.

உலகத்திலே இந்தியாதான்  மிகவும் சகிப்புத்தன்மை கொண்டது. இன்றைக்கு என்ன நடக்கிறது என்று  எல்லோருக்கும் தெரியும். சட்டம் இருக்கிறது, போலீஸ் இருக்கிறது. ஆனால் சட்டங்களையும்,  விதிகளையும் மக்கள்தான்  பின்பற்ற  வேண்டும். உணர்ச்சி வசப்பட்டு,  சகிப்புத்தன்மையை இழந்துவிட்டால் நமது நாட்டுக்கே அழிவு ஏற்படும். பல்கலைக்கழக  பட்டமளிப்பு உடையில் இன்னும் ஆங்கிலேய காலனியாதிக்க நினைவு ஏன்?   இந்திய கலாச்சாரத்துக்கு ஏற்ற வகையில் உடையை  மாற்றுங்கள்.  ஆங்கில முறையையே இன்னும் கடைபிடிப்பது ஏன்? கதர், காதி, பட்டு என  இந்திய  தொடர்பானதாக இருக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி, வருவாய்த்துறை  அமைச்சர் ஷாஜகான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக  பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங் வரவேற்றார்.

Related Stories: