கண்மாயில் தண்ணீர் இருந்தும் சரணாலயத்திற்கு வராத பறவைகள்: ஏமாற்றத்தில் கிராம மக்கள்

சாயல்குடி: முதுகுளத்தூர் அருகே கீழகாஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலய கண்மாயில் தண்ணீர் இருந்தும், பறவைகள் வராததால் கிராமமக்கள், பார்வையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். முதுகுளத்தூர் அருகே கீழகாஞ்சிரங்குளம் கண்மாயில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் பருவ மழை பெய்ய துவங்கியவுடன் கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும், உள்நாட்டியின் பல்வேறு பகுதிகளிலிருந்து தாழை கொத்தி, செங்கால், நத்தைகொத்தி, கிங்பிஷர், கரண்டிவாய் மூக்கன், வில்லோவால்பவர், ஆஸ்திரேலியா பிளம்மிங்கோ, நாரை, கொக்கு வகைகள், கூழைகிடா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வகையான பறவைகள் வருவது வழக்கம். இங்குள்ள தட்பவெப்ப சூழ்நிலையில் இனப்பெருக்கம் செய்வதற்கும், தேவையான இரைகள் கிடைப்பதால் பல நூறு மைல் தூரம் கடந்து பறந்து பறவைகள் வருவது வழக்கம்.

இங்குள்ள கண்மாயிலுள்ள நாட்டுகருவேலம், சீமை கருவேலம் மரங்களில் மார்ச் மாதம் இறுதி வரை தங்கி, முட்டையிட்டு குஞ்சு பொறித்து, குஞ்சுகளுடன் பறந்து செல்லுவது வழக்கம். ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து வறட்சி நிலவி வருவதால் சில மரங்கள் பட்டுபோய் வேரோடு சாய்ந்து கிடந்தது. சமூக விரோத கும்பலும் மரங்களை வெட்டி கடத்தியது. இந்நிலையில் இந்தாண்டு கனமழை பெய்து கண்மாய் நிறைந்தும் கூட, தங்கி இனப்பெருக்கம் செய்யும் அளவிற்கு அடர்த்தியான மரங்கள், போதிய வசதி இல்லாததால் வந்த பறவைகள் திரும்பி, அருகிலுள்ள சித்திரங்குடி, கடலாடி அருகே உள்ள மேலச்செல்வனூர் சரணாலயங்களுக்கு சென்று தங்கி உள்ளதாக கிராம மக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து கீழகாஞ்சிரங்குளம் கிராமமக்கள் கூறும்போது, தண்ணீர் பெருகிய காலங்களில் சரணாலயத்தில் தங்கியுள்ள பறவைகளை பார்வையிடுவதற்கு உள்ளூர் பகுதி மக்கள் மட்டுமின்றி, சுற்றுலாபயணிகள், மாணவர்கள் ஆண்டுதோறும் வருவது வழக்கம்.

தற்போது கண்மாயில் தண்ணீர் இருந்தும், பறவைகள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். மேலும் மழை காலங்களில் பெருக்கெடுத்து ஓடி வரும் தண்ணீர் வீணாக செல்கிறது. பறவைகள் சரணாலயம் உள்ள கண்மாயில் தண்ணீரை தேக்கி வைக்க தடுப்பணைகள், கான்கிரீட் தடுப்பு வரத்துகால்வாய் கட்டவேண்டும். மரங்களை வெட்டுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டுபோன மரங்களை அகற்றி விட்டு புதிய மரக்கன்றுகளை நடவும், கண்மாயினை புனரமைப்பு செய்யவும் பொதுப்பணி துறை மற்றும் வனத்துறையினர் முன்வரவேண்டும் என்ற கோரிக்கை விடுத்தனர். விருந்தாளிகள் போல் வந்து ரம்மீயமான ஆரவாரத்துடன், மெல்லிசை, இனிய ரீங்காரத்துடன் இருக்கும் பறவைகள், 8 ஆண்டு வறட்சிக்கு பிறகு கண்மாயில் தண்ணீர் இருந்தும், வராதது கிராமமக்களும் ஏமாற்றம் அளிப்பதாக கவலை தெரிவிக்கின்றனர்.

Related Stories: