போக்குவரத்து சந்திப்புகள் மறுசீரமைப்பு இன்டலிஜென்ட் டிரான்ஸ்போர்ட் திட்டப் பணிகள் தொடக்கம்

சென்னை: இன்டலிஜென்ட் டிரான்ஸ்போர்ட் திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள போக்குவரத்து சந்திப்புகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளன. இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. சென்னை மாநகராட்சி பகுதியில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. இதை குறைக்கவும் பொது போக்குவரத்தை மேம்படுத்தவும் சென்னை  மாநகராட்சி பல்வேறு பணிகளை செய்து வருகிறது.

அதன்படி, சென்னையில் பல்வேறு பகுதிகளில் வாகனம் இல்லா போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சைக்கிள் ஷேரிங் திட்டம், ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. போக்குவரத்தை மேம்படுத்த இன்டலிஜென்ட் டிரான்ஸ்போர்ட் திட்டம் செயல்படுத்தபட உள்ளது.  இந்த திட்டத்தின்படி, சாலை போக்குவரத்து மேலாண்மை விதிகளின்படி சாலைகள் மற்றும் போக்குவரத்து சந்திப்புகள்  மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது. 660 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தபட உள்ள இதில், ஜப்பான் நிறுவனம் 465 கோடியும், தமிழக அரசு ₹195 கோடியும் வழங்குகிறது.

இதுதொடர்பாக ஸ்மார்ட் சிட்டி நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் மொத்தம் 450க்கும் மேற்பட்ட போக்குவரத்து சந்திப்புகள் உள்ளன. இவற்றில் முதற்கட்டமாக 167 சந்திப்புகள் சீரமைக்கப்படுகிறது. இந்த சிக்னல்களில் வாகன கண்காணிப்பு கருவிகள், போக்குவரத்து கட்டுப்பாட்டு கருவிகள்  அமைக்கப்பட உள்ளன. போக்குவரத்து மேலாண்மை திட்டத்தின்படி அனைத்து மாநகர பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படும். இதற்காக உருவாக்கப்படும் செயலி மூலம் அந்த வழித்தடத்தில் பஸ்கள் வரும் நேரம், குறிப்பிட்ட  இடத்துக்கு சேர்வதற்கு ஆகும் காலம், இருக்கைகள் எண்ணிக்கை போன்ற விவரங்களை பார்க்கலாம். இதை தவிர்த்து மாநகர பஸ்களில் சிசிடிவி கேமரா, அனைத்து மாநகர பேருந்துகளிலும் டிஜிட்டல் தகவல் பலகை, நகரின் முக்கிய பகுதிகளில் 12 இடங்களில் பெரிய அளவிலான தகவல் பலகை அமைக்கப்படவுள்ளது. இந்த பணிகளை ரிப்பன்  மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் மூலம் கண்காணிக்கலாம். இந்த திட்டத்திற்கான அறிக்கை தயார் செய்யும் பணிக்கு இரண்டு ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

டிஜிட்டல் பேமன்ட்

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் கைப்பேசி, ஸ்மார்ட் அட்டை, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் பேருந்து பயணத்துக்கான கட்டணங்களை பேருந்து நிலையங்களிலும், பேருந்துகளிலும் செலுத்தலாம்

Related Stories: