பாகிஸ்தானுக்கு ஆதரவாக மாணவி அமுல்யாவை பேச வைத்தது ஓவைசி: ஸ்ரீராமசேனா தலைவர் குற்றச்சாட்டு

பெங்களூரு: ‘பாகிஸ்தானுக்கு ஆதரவாக மாணவியை பேசவைத்தது ஓவைசி தான். அவர் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்று ஸ்ரீராம்சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக்  குற்றம்சாட்டியுள்ளார். தேசிய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு  எதிராக பெங்களூரு சுதந்திர பூங்காவில் நேற்று முன் தினம்  இந்து-இஸ்லாம்-சிக்-ஈசாயி கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடந்தது.  இதில், ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.  இந்த கூட்டத்தில் பேசிய சிக்கமகளூருவை சேர்ந்த கல்லூரி மாணவி அமுல்யா  லியோனா (19) பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்டார். இதையடுத்து, உடனடியாக  போலீசார் அவரை கைது செய்து தேசதுரோக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்படி அவர் பெங்களூரு மத்திய சிறையில்  அடைக்கப்பட்டார். அமுல்யாவின் செயலுக்கு அரசியல்  தலைவர்கள் உள்பட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மாணவி  சுயமாக பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் எழுப்பவில்லை. இதன் பின்னணியில்  ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் ஓவைசி உள்ளார் என்ற குற்றச்சாட்ைட ராமசேனா  தலைவர் பிரமோத் முதாலிக் முன்வைத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: கடந்த 16ம் தேதி கல்புர்கியில் தேசிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக  ஐதராபாத் மக்களவை தொகுதி உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி தலைமையில் நடந்த  மாநாட்டில் ஏஐஎம்ஐஎம் அமைப்பின் தலைவர் வாரிஸ் பதான் பேசும்போது,  ‘இந்தியாவில் 15 கோடி இஸ்லாமியர்கள் உள்ளோம். எங்களுக்கு 100 கோடி  இந்துக்களை அழிக்கும் சக்தி உள்ளது,’ என்று பேசினார். இந்த பேச்சுக்கு  மேடையில் இருந்த ஓவைசி எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை. பதானின் கருத்தை  ஆதரிப்பது போல் மேடையில் இருந்தார்.

கல்புர்கி கூட்டம் நடந்த நான்கு  நாட்களுக்கு பின் பெங்களூருவில் ஓவைசி தலைமையில் நடந்த மற்றொரு கூட்டத்தில்  பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமுல்யா என்ற மாணவி முழக்கம் எழுப்பினார். இந்த இரு சம்பவங்களை  பார்க்கும்போது, ஓவைசி தான் அவர்களை மறைமுகமாக பேச வைத்தாேரா என்ற சந்தேகம்  எழுகிறது இவ்வாறு அவர் கூறினார்.முதல்வர் எடியூரப்பா கூறுகையில், ‘‘மாணவி அமுல்யா,  சிக்கமகளூருவில் நக்சலைட் இயக்கத்துடன் தொடர்பில் உள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.  ‘‘பாகிஸ்தான் வாழ்க என்று கோஷமிட்ட என்மகளின் கை, கால்களை முறிக்க  வேண்டும், அவரை பாதுகாக்க நான் முயற்சிக்க மாட்டேன்’’ என்று அவருடைய  தந்தையே கூறி இருக்கிறார். இதனால், அந்த மாணவியின் பின்னணி குறித்து  தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது,’’ என்றார்.உள்துறை அமைச்சர்  பசவராஜ் பொம்மை கூறுகையில், ‘‘கர்நாடகாவில் பொது அமைதியை சீர்குலைக்கும்  நோக்கத்தில் சிலர் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்கள். அவர்களின்  தூண்டுதல் பேரில்தான் மாணவி  அமுல்யா பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசி இருப்பாரோ என்ற  சந்தேகம் உள்ளது. உள்நோக்கத்துடன் பேசி இருப்பது விசாரணையில் தெரிந்தால்  சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.இந்நிலையில், சிக்கமகளூருவில் மாணவி அமுல்யா வீட்டின் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

வந்தே மாதரத்திற்கு குரல் கொடுத்தவர்

போஸ்ட்  கார்டு நியூஸ் நிறுவனத்தின் தலைவர் மகேஷ் விக்ரம் கடந்த ஜனவரி 31ம் தேதி  மங்களூரு விமான நிலையம் வந்தபோது, அவரை எதிர்த்து போராட்டம் நடத்தியதுடன்  வந்தே மாதரம் பாடல் பாடும்படி வலியுறுத்திய மூன்று பெண்களில் அமுல்யாவும்  ஒருவர். அவர் தற்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பி இருப்பது  ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

‘வெளியேற்ற வேண்டும்’

கர்நாடகா எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா அளித்த பேட்டியில், ‘‘இந்தியாவில் வசிக்கும் அனைவரும் நாட்டு பற்றுடன் நடந்து கொள்ள வேண்டும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வசிக்கிற அனைவரும் இந்தியர்கள்தான். அதே நேரம் பாகிஸ்தான் வாழ்க என கோஷம் எழுப்பும் நபர்களை விட்டு விடக்கூடாது. ஆண், பெண் என்ற பாகுபாடின்றி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசத் துரோக செயல்களில் ஈடுபடும் நபர்களை நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும்,’’ என்றார்.

Related Stories: