டிக் டாக் மோகம்: புதுக்கோட்டையில் தனியார் கல்லூரி மாணவர் கைது

புதுக்கோட்டை:  டிக் டாக் மோகத்தில் புதுக்கோட்டையில் பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் வீடியோ எடுத்த கல்லூரி மாணவரை காவலர்கள் கைதுசெய்தனர். ஆலங்குடி அருகேயுள்ள கருக்காக்குறிச்சி பகுதியை சேர்ந்த கண்ணன் தனியார் பள்ளியில் படித்து வருகிறார். டிக் டாக் செயலி மீது அதிக மோகம் கொண்ட கண்ணன், சாலையில் செல்லும் பொதுமக்களை மறித்து, அவர்களை அச்சுறுத்துவது மட்டுமன்றி, அவர்களின் முன்பு நடனமாடி அதை டிக் டாக் செயலியில் பதிவேற்றம் செய்துவந்தார். சாலையில், நடந்துவரும் பொதுமக்களை நோக்கி ஓடிச் சென்று நடனமாடுவது, முதியவர்களிடம் அவமரியாதையாக நடந்துகொள்வது, அத்துமீறிச் செயல்படுவது என இவரின் அட்டகாசம் தொடர்ந்து கொண்டே இருந்தது. பேருந்து நிலையம், பூங்கா, ரயில் நிலையம் எனப் பொதுமக்கள் கூடும் இடங்களில் இவரின் டிக் டாக் அத்துமீறல்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

பொதுமக்களை அச்சுறுத்தி, முகம் சுளிக்க வைப்பது போன்ற இவரின் டிக் டாக் பதிவுக்கு டிக் டாக் பிரியர்கள் பலரும் தங்களது எதிர்ப்புகளை டிக் டாக்கில் தெரிவித்திருந்தனர். ஐயா பொது ஜனங்களே இந்த டிக் டாக் மனநோயாளியை நீங்களாவது நாலு சாத்து சாத்தி மருத்துவமனையில் சேருங்கள் என்றெல்லாம் சில டிக் டாக் பிரியர்கள் கண்ணனை டேக் செய்து பதிவிட்டிருந்தனர். இதனையடுத்து, இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று காவலர்களிடம் வலியுறுத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதுபற்றித் தகவல் அறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உத்தரவிட்டார். இதனையடுத்து, வடகாடு போலீசார் கண்ணனை கைது செய்தனர். மேலும், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு கண்ணன் சிறையில் அடைக்கப்படலாம் என்று அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

Related Stories: