சொந்த நலன்களுக்காக இந்தியா வருகை: 70 லட்சம் மக்கள் வரவேற்க டிரம்ப் என்ன கடவுளா?...காங். எம்.பி ஆதிர் ரஞ்சன் தாக்கு

டெல்லி: எங்களை மகிழ்விக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வரவில்லை என காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி  தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது மனைவி மெலினாவுடன் இரண்டு நாள் பயணமாக, 24ம் தேதி இந்தியா வருகிறார். இந்தியா வரும்  டிரம்ப், பிரதமர் மோடியுடன் சொந்த மாநிலமான குஜராத் மற்றும் அவரது நாடாளுமன்ற தொகுதியுள்ள உத்தர பிரதேச மாநிலத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகளில்  கலந்து கொள்கிறார்.

இதையொட்டி நகரை அழகுபடுத்தும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது. சாலைகள் புதுப்பிக்கப்பட்டு, சுவர்களில், இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும்  ஓவியங்கள் வரையப்படுகின்றன. சாலை தடுப்புகள், சிலைகள் ஆகியவற்றுக்கு வர்ணம் பூசப்படுகிறது. இதற்கிடையே, அகமதாபாத்தில் அமைக்கப்பட்டுள்ள  உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மோதிரா கிரிக்கெட் அரங்கை அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடி ஆகிய இருவரும் திறந்து வைக்கின்றனர்.

இந்தியா வருகை தொடர்பாக வாஷிங்டனில் அதிபர் ட்ரம்ப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பிரதமர் மோடியை அதிகமாக விரும்பக்கூடிய  சூழல் எனக்கு ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்திலிருந்து விழா நடைபெறும் இடம் வரை வரவேற்பதற்கு சுமார் 70 லட்சம் மக்கள் இருப்பார்கள் என்று அவர்  என்னிடம் சொன்னார். இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் செய்ய உள்ளோம். ஆனால், அதை தேர்தல் வரை தள்ளிவைக்கலாம் என்று இருக்கிறேன்.  கண்டிப்பாக இந்தியாவுடன் மிகப்பெரிய ஒப்பந்தம் மேற்கொள்ள இருக்கின்றோம்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருகை குறித்து பேசிய காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, டிரம்பை வரவேற்க 70 லட்சம் மக்களை  ஒன்றுத்திரட்ட வேண்டிய அவசியம் என்ன? அவர் என்ன கடவுளா? அவர் தனது சொந்த நலன்களுக்காக தான் இந்தியா வருகிறாரே தவிர எந்த வர்த்தக  ஒப்பந்தத்தையும் செய்யவில்லை. டிரம்ப், அமெரிக்காவின் நலனுக்கா மட்டுமே பணியாற்ற விரும்புகிறார். எங்களை மகிழ்விக்க வரவில்லை என்று கூறினார்.

Related Stories: