‘மத வழிபாடு விவகாரத்தில் அதிகாரம் கூடாது’: சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் வாதம்

புதுடெல்லி: மத வழிபாடு விவகாரத்தில் அதிகாரம் செலுத்தக் கூடாது என சபரிமலை வழக்கில் முதல் நாளான நேற்று வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் சென்று வழிபாடு செய்யலாம் என்ற உத்தரவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 64க்கும் மேலான மறுசீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷண், நாகேஸ்வர ராவ், எம்.எம்.சந்தானகவுடர், அப்துல் நசீர், சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய் மற்றும் சூர்யகாந்த் ஆகிய ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

இதில் கடந்த 10ம் தேதி மனு விசாரணைக்கு வந்தபோது, ‘‘தற்போது உள்ள அமர்வே இந்த வழக்கை விசாரிக்கும் என்றும், வேறு அமர்வுக்கு மாற்ற தேவையில்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த விவகாரத்தில் முந்தைய அமர்வு எழுப்பிய ஏழு கேள்விகளை மட்டும்தான் ஆராய உள்ளோம். வழக்கு பிப்ரவரி 17ம் தேதி முதல் விசாரிக்கப்படும்’’ என உத்தரவிட்டனர். இந்த நிலையில், சபரிமலை தரிசன வழக்கு உச்ச நீதிமன்றத்தின் மேற்கண்ட ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மூத்த வழக்கறிஞர் பராசரண் நீதிபதிகள் முன்னிலையில் ஒரு கோரிக்கை வைத்தார். அதில், “இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால், நீதிமன்றம் அவசர கதியில் 10 நாட்களில் வாதங்களை முடிக்கக் கூடாது. குறைந்த பட்சம் 2 வாரங்களாவது விசாரிக்க வேண்டும்’’ எனக் கேட்டுக் கொண்டார். மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா முதலாவதாக வாதத்தை தொடங்கினார். அதில், “இது மதம் மற்றும் வழிபாடு தொடர்புடையது என்பதால், இந்த விவகாரத்தில் அரசியல், செல்வாக்கு மிகுந்தவர்கள், அதிகாரம் பலம் என எந்த தலையீடும் இருக்கக்கூடாது. சட்ட வழிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட வேண்டும்” என வாதிட்டார்.

அதேபோல் பெண்கள் அமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், இந்த விவகாரத்தில் பெண்களின் வழிபாட்டு உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றார். பின்னர், நீதிபதிகள் கூறும்போது, “அரசியலமைப்பு சட்டம் 25 மற்றும் 26வது பிரிவுகளில் கொடுக்கப்பட்டுள்ள மதரீதியான உரிமைகள் மற்றும் அவை அனைத்தும் மத நம்பிக்கைக்கு உட்பட்டதா என்பது குறித்து தான் முதலில் விசாரிக்கப்படும். இதையடுத்து தான் சபரிமலை சீராய்வு மனுக்கள் விசாரிக்கப்படும்’’ என தெரிவித்தனர்.

Related Stories: