நில ஆர்ஜிதம் செய்ய A90 கோடி ஒதுக்கீடு டெரிக் சந்திப்பு முதல் பறக்கை விலக்கு வரை மேம்பாலம் அமையுமா?... அதிகாரிகள் மவுனம் - வியாபாரிகள் கலக்கம்

நாகர்கோவில்: டெரிக் சந்திப்பு முதல் பறக்கை விலக்கு வரையிலான மேம்பாலத்துக்கு நில ஆர்ஜிதம் செய்ய தமிழக அரசு அறிவித்த ரூ.90 கோடி சிக்கலில் உள்ளது. நாகர்கோவில் டெரிக் சந்திப்பு முதல் செட்டிக்குளம், சவேரியார்கோயில் சந்திப்பு வழியாக பறக்கை விலக்கு வரையிலான மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.  இந்த மேம்பாலம் அமைந்தால், செட்டிக்குளம், கோட்டார் வர்த்தக பகுதியே இல்லாமல் போய் விடும். நூற்றுக்கணக்கான வியாபாரிகள், தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள். எனவே மேம்பாலம் வேண்டாம் என வர்த்தக சங்கத்தினர் கூறினர். ஒரு பிரிவினர், வியாபாரிகளுக்கு பாதிப்பு இல்லாமல் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றனர்.

கடந்த 2018 அன்று, நாகர்கோவிலில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அப்போதைய மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனின் கோரிக்கையை ஏற்று மேம்பாலம் அமைக்க தமிழக அரசு ஒத்துழைக்கும் என அறிவித்தார். இதை தொடர்ந்து மண் ஆய்வு மற்றும் நில அளவீடு பணிகள் நடந்தன. இந்த நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தோல்வி அடைந்தார். இதனால் மேம்பால பணிகள் கிடப்பில் போடப்பட்டன.

இந்த நிலையில், நாகர்கோவில் மாநகரில் தற்போது அதிக போக்குவரத்து நெருக்கடி கே.பி. ரோட்டில் தான் உள்ளது. இதற்கு தீர்வு காண டெரிக் முதல் பறக்கை விலக்கு வரையிலான மேம்பால பணியை தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மேம்பாலம் சுமார் 3 கி.மீ. தூரத்துக்கு திட்டமிடப்பட்டது. அதாவது டெரிக் சந்திப்பு அருகே இருந்து தொடங்கி கலெக்டர் அலுவலக சந்திப்பு, செட்டிக்குளம் சந்திப்பு, சவேரியார் கோயில் சந்திப்பு, ஈத்தாமொழி விலக்கு வழியாக பறக்கை விலக்கு சந்திப்பில் நிறைவடையும். இதில்  கலெக்டர் அலுவலக சந்திப்பு, செட்டிக்குளம் சந்திப்பு பகுதியில் ரவுண்டானா அமைக்கப்படும்.

சவேரியார் கோயில் சந்திப்பில் திருப்பி, ரயில் நிலையத்துக்கு செல்ல மேம்பாலத்தில் இருந்து இணைப்பு சாலை அமைக்கப்படும் என்று திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்துக்கு நில ஆர்ஜித பணிகளுக்கு ரூ.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறி உள்ள அதிகாரிகள், பாலம் கட்டுவதற்கான பணிகளை கைவிடுவதற்கான சாத்திய கூறுகள் இல்லை என கூறி இருக்கிறார்கள். ஆனால் பாலப்பணிகள் எப்போது தொடங்கும். நில அளவீடு பணி முடிவடைந்து விட்டதா? என்பது பற்றிய அறிவிப்புகள் நெடுஞ்சாலை துறையிடம் இல்லை. இதற்கிடையே தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாவட்ட தலைவர் டேவிட்சன் உள்ளிட்டோர் இந்த மேம்பாலம் அமைக்க வேண்டாம் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் மாநகராட்சி ஆணையர் தரப்பில், ஏற்கனவே அளவீடு செய்யப்பட்ட படி, கடைகளை இடிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து எஸ்.பி.யை சந்தித்து வணிகர் சங்க பேரவை சார்பில் மனு அளிக்கப்பட்டது. வியாபாரிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். வியாபாரிகளை கலந்தாலோசிக்காமல் கட்டிடங்களை இடிக்க எந்த வித பாதுகாப்பும் வழங்க கூடாது. நான்கு வழிச்சாலை பணிகள் முடிவடைந்த பின், நெருக்கடி இருந்தால் மேம்பாலம்  அமைக்கலாம். அதுவரை இந்த மேம்பால பணிகளை தொடங்க கூடாது. வியாபாரிகளை மிரட்டுவதை ஆணையர் சரவணக்குமார் கைவிட வேண்டும்  என டேவிட்சன் கூறினார்.

இது போன்ற பிரச்சினையில் தற்போது மேம்பாலம் அமைக்கும் பணி அப்படியே கிடப்பில் உள்ளது. இந்த நிலையில் நில ஆர்ஜித பணிக்காக தமிழக அரசு ஒதுக்கீடு செய்வதாக அறிவித்த ரூ.90 கோடியை மாற்று திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுமா? அல்லது மேம்பால பணி  நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது பற்றி நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, மாவட்ட கலெக்டர் தான் இதில் முடிவு செய்ய வேண்டும். வியாபாரிகள் எதிர்ப்பு இருப்பதால், இப்போதைக்கு எந்த நடவடிக்கையும் வேண்டாம் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசு ஒதுக்கீடு செய்த ரூ.90 கோடி நிதியை மாற்று பணிகளுக்கு பயன்படுத்த முடியாது. முதலமைச்சரின் உத்தரவின் பேரில் நிதி அறிவிக்கப்பட்டது. ஆனால் முதற்கட்ட நிதி கூட, இதில் ஒதுக்கீடு இல்லை என்றனர்.

வியாபாரிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்

நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் ராம் கூறுகையில், நான்கு வழிச்சாலை அமைந்தாலும் நாகர்கோவில் மாநகரில் போக்குவரத்து நெருக்கடி குறையாது. எனவே டெரிக் சந்திப்பு முதல், பறக்கை விலக்கு வரையிலான 3 கி.மீ. நீள மேம்பாலம் நிச்சயம் அமைக்க வேண்டும். பார்வதிபுரம் மற்றும் மார்த்தாண்டம் மேம்பாலத்துக்கு இப்படி தான் எதிர்ப்பு இருந்தது. இப்போது அனைவரும் வரவேற்கிறார்கள். போக்குவரத்து நெருக்கடி குறைந்துள்ளது. எனவே மேம்பாலம் அமைக்கும் பணி நடக்க வேண்டும். இடம் அளிப்பவர்களுக்கு உரிய சந்தை மதிப்பீட்டு தொகையை வழங்க வேண்டும். வியாபாரிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் பணிகள் நடைபெற வேண்டும் என்றார்.

Related Stories: