சேலம் உள்பட 6 மாவட்டம் வழியாக செல்லும் எண்ணெய் குழாய் திட்டத்துக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு: முதல்வரை சந்தித்து மனு அளிக்க முடிவு

சேலம்: சேலம் மாவட்டம், சங்ககிரியில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சார்பில் விளைநிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் சேலம், நாமக்கல்  மாவட்டத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். நாளை (18ம் தேதி) சங்ககிரி தாலுகா அலுவலகத்தில் நடக்கும் கருத்து கேட்பு கூட்டத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.  மேலும், இந்த திட்டத்தை சாலையோரமாக மாற்று வழியில் செயல்படுத்த, தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை வைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இது குறித்து இத்திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டமைப்பின்  ஒருங்கிணைப்பாளர் கவின்குமார் கூறியதாவது:

கோவை மாவட்டம் இருகூரில் இருந்து, கர்நாடகா மாநிலம் பெங்களூரு தேவனகுந்தி வரை 310 கிலோமீட்டர் தூரம் கோவை,

 ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் வழியாக பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் மூலம்,  விவசாய நிலத்தில் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக, கடந்த சில நாட்களுக்கு முன், அதிகாரிகள் விவசாய நிலத்தின் நடுவில் சுமார் 20 மீட்டர் தூரத்திற்கு அளவீடு செய்துள்ளனர். இந்த திட்டத்தால்  சேலம் மாவட்டத்தில் உள்ள 3 தாலுகாவில், 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலம் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சங்ககிரி, இடைப்பாடி உள்ளிட்ட தாலுகாவை சேர்ந்த  பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம், 18 (நாளை), 20, 24, 26 ஆகிய தேதிகளில் சங்ககிரி தாலுகா அலுவலகத்தில் நடக்கவுள்ளது.

மகாராஷ்டிரா, கேரளாவில் இதுபோன்ற திட்டங்கள், சாலையோரம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மட்டும்தான் விவசாய நிலத்திற்கு நடுவே செயல்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது  கெயில் திட்டத்தை சாலையோரமாக செயல்படுத்த சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்.  அதேபோல், இத்திட்டத்தையும் சாலையோரமாக செயல்படுத்த வலியுறுத்தி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மனு கொடுக்க  தீர்மானித்துள்ளோம். கருத்துக்கேட்பு கூட்டத்திற்கு, விவசாயிகளை ஒன்றாக அழைக்காமல் ஒவ்வொரு நாளும் 50 பேரை அழைத்து பேச அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒரே நாளில் அனைத்து விவசாயிகளிடம் கருத்துக்கேட்பு கூட்டம்  நடத்த அதிகாரிகளிடமும் வலியுறுத்த இருக்கிறோம். கூட்டத்தில் எதற்காக இத்திட்டம் வருகிறது?, திட்டத்தின் வரைபடம், மத்திய சுற்றுச்சூழல் ஒப்புதல் உள்பட 13 ஆவணங்களை அதிகாரிகளிடம் கேட்க இருக்கிறோம். இவ்வாறு கவின்குமார்  கூறினார்.

Related Stories: