முதல்வர் எடப்பாடி நவீன ராஜராஜசோழன்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வர்ணனை

தரங்கம்பாடி: ‘‘டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததால் எடப்பாடியார், நவீன ராஜராஜசோழன்’’ என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வர்ணித்துள்ளார். நாகை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தன்னுடைய தந்தை தவசிலிங்கம், தாயார் கிருஷ்ணம்மாள் ஆகியோரின் 80 வயது பூர்த்தியையொட்டி நேற்று சிறப்பு பூஜை, யாகம் நடத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் எடப்பாடியார் 1 லட்சம் மக்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் அறிவித்தார்.

ஒட்டு மொத்த தமிழக மக்களுக்காக தமிழக முதலமைச்சர் இந்த திட்டத்தை அறிவித்துள்ளார். சவாலான இந்த திட்டத்தில் இருந்து முதலமைச்சர் பின்வாங்க மாட்டார். இதை எப்படி சட்டமாக்க வேண்டுமென்பதை ஆலோசித்து சட்டமாக்குவார். டெல்டாவில் இருந்து ஓ.என்.ஜி.சி இனி மூட்டைக் கட்டி போக வேண்டும். கரிகாலனை பார்த்து இருக்கிறோம். ராஜராஜசோழனை பார்த்து இருக்கிறோம். இத்திட்டத்தின் மூலம் முதலமைச்சர் எடப்பாடியாரை நவீன ராஜராஜசோழனாக தமிழ்நாடு பார்க்கிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் ஏப்ரல் மாதம் கண்டிப்பாக நடக்கும் என்று தேர்தல் கமிஷனிடமிருந்து வரும் தகவல்கள் மூலம் தெரிய வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: