காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போராடிய வழக்கில் வைகோ, திருமாவளவன் மீது குற்றச்சாட்டு பதிவு

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, ரயில் மறியலில் ஈடுபட்ட வழக்கில் வைகோ, திருமாவளவன் மீது சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த 2016ம் ஆண்டு, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் 500கும் மேற்பட்டோர், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், போலீசாரின் தடையை மீறி அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியதாக கூறி எழும்பூர் போலீசார் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

வைகோ மற்றும் திருமாவளன் எம்.பிகள் என்பதால், இந்த வழக்கு, சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, எம்பி, எம்எல்ஏ-க்களுக்கான நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதன்படி வழக்கு நேற்று நீதிபதி, ஏ.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வைகோ மற்றும் திருமாவளவன் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அவர்கள் மீதான குற்றச்சாட்டை நீதிபதி வாசித்து காண்பித்தார். அதை, அவர்கள் மறுத்தனர். இதையடுத்து, நீதிபதி வழக்கின் சாட்சி விசாரணைகளுக்காக வழக்கை வரும் மார்ச் 4ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Related Stories: