ராஜபாளையத்தில் குடியிருப்பு பகுதியில் குப்பையில் இருந்து உரம் தயாரிக்க எதிர்ப்பு

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் குடியிருப்பு பகுதியில், குப்பையில் இருந்து உரம் தயாரிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்பணியை புறநகர் பகுதிகளில் மேற்கொள்ள கோரிக்கை விடுத்துள்ளனர்.ராஜபாளையத்தில் தூய்மை இந்தியா திட்டம் மூலம், ஓராண்டுக்கு முன் குப்பைகளிலிருந்து உரம் தயாரிக்கும் பணிக்கு 6 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதற்காக மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், பணம் ஒதுக்கீடு செய்து, குப்பைகளை சேகரிக்க பேட்டரி வாகனங்களும், சிறிய வேன்களும் வாங்கப்பட்டுள்ளன. ஆனால், பல இடங்களில் உரம் தயாரிக்கும் பணிக்கு, அப்பகுதி குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், நகரில் உள்ள நகராட்சி அலுவலக வளாகம், திருவனந்தபுரம் தெரு செல்லும் பாதையில் உள்ள நகராட்சி மாட்டுக்கொட்டகை ஆகிய இடங்களில் குப்பைகளிலிருந்து உரம் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘ராஜபாளையம் நகராட்சி நிர்வாகம் மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து நிதியை பெற்று செயல்படுத்தும் திட்டங்களை முறையாக தெரிவித்து, பொதுமக்களிடம் கருத்து கேட்பதில்லை. அரசுக்கு சொந்தமான நிலங்கள் நகர் பகுதி ஒதுக்குப்புறங்களில் அதிகமாக உள்ளன. இந்த பகுதிகளில் உரம் தயாரிக்கும் பணியை தொடங்கலாம். ஆனால், குடியிருப்பு பகுதிகளில் தொடங்குகின்றனர். நகர் பகுதிகளில் முறையாக குப்பைகளை அகற்றுவதில்லை. இதனால், பொதுமக்கள் ஆங்காங்கே குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

Related Stories: