நிர்பயா குற்றவாளிகளை தூக்கில் போட புதிய தேதி: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: ‘நிர்பயா பாலியல் பலாத்கார, கொலை குற்ற வழக்கில் குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற விசாரணை நீதிமன்றத்தை அணுகி புதிய தேதியை பெற்றுக் கொள்ளலாம்,’ என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா, கடந்த 2012ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேரின் தூக்கு தண்டனைக்கு பாட்டியாலா நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதை எதிர்த்து மத்திய, டெல்லி மாநில அரசுகள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.

அதில், குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கில் போட அனுமதி கேட்கப்பட்டது. இதை நீதிமன்றம் நிராகரித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷண் மற்றும் போபண்ணா அடங்கிய சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா, “இந்த வழக்கில் மூன்று குற்றவாளிகளின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு விட்டது. பவன் குமார் குப்தா என்ற குற்றவாளி மட்டும், ஜனாதிபதிக்கு இன்னும் கருணை மனு அனுப்பாமல் உள்ளார். இதில் வழக்கில் ஒன்றுக்கும் மேற்பட்ட குற்றவாளிகள் இருப்பதால், அதில் ஒருவரின் கருணை மனு நிலுவையில் இருந்தாலும், வழக்கில் தொடர்புடைய அனைவரின் தண்டனையையும் தள்ளி போட வேண்டும் என்று சிறை சட்ட விதி கூறுகிறது.

மேலும், இந்த வழக்கில் குற்றவாளிகள் அனைவரையும் ஒரே நேரத்தில்  தூக்கிலிட வேண்டும் என விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டதையே, டெல்லி உயர் நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இதனால், அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுப்பதில் சிக்கல் உள்ளது. குற்றவாளிகள் சட்டம் கொடுத்துள்ள நடைமுறைகளை துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர்,’’ என்றார். இதையடுத்து, மத்திய அரசின் மனுவுக்கு பதில் அளிக்கும்படி குற்றவாளிகள் 4 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை  நிறைவேற்ற, விசாரணை நீதிமன்றத்தை அணுகி புதிய தேதியை பெற்றுக் கொள்ளலாம் என்று மத்திய அரசுக்கு அனுமதி வழங்கி, வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தனர். இந்நிலையில், தனது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை எதிர்த்து, குற்றவாளிகளில் ஒருவனான வினய் சர்மா, உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளான்.

Related Stories: