டெல்லி ஷாகீன் பாக்கில் நடக்கும் சிஏஏ போராட்டத்துக்கு தடை விதிக்க மறுப்பு: நிபந்தனையுடன் உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. டெல்லியின் ஜமியா மிலியா பல்கலைக்கழகத்துக்கு அருகே இருக்கும் ஷாகீன் பாக் பகுதியில் இச்சட்டத்துக்கு எதிராக 50 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் 4 மாத குழந்தையுடன் ஒரு இளம்பெண் கலந்து கொண்டார். இதில் கடுங்குளிரில் போராட்டத்தில் கலந்து கொண்டதால், இரவில் வீடு திரும்பும்போது, அந்த குழந்தை ஜன்னி கண்டு இறந்தது.

இந்நிலையில், பாஜ எம்எல்ஏ நந்த் கிஷோர் கார்க் என்பவரும், வக்கீல் அமித்ஷானி என்பவரும் தனித்தனியாக இந்த போராட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தங்கள் உத்தரவில், ‘‘போராட்டத்துக்கு இடைக்கால தடை எதுவும் விதிக்க முடியாது. ஆனால், மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தக்கூடாது. பொது இடம் ஒன்றில் இப்படி நீண்ட நாட்கள் போராட்டம் நடத்தக்கூடாது. அப்படி நடத்த வேண்டும் என்றால், தனி இடத்தில் வைத்து போராட்டத்தை மேற்கொள்ளலாம்’’ என்றனர்.

* வழக்கை கையில் எடுத்தது

இதற்கிடையே, ஷாகீன் பாக் போராட்டத்தில் 4 மாத குழந்தை இறந்தது தொடர்பான விவகாரத்தை உச்ச நீதிமன்றம் நேற்று தானாக முன்வந்து பொதுநல வழக்காக பதிவு செய்தது. மேலும், இதன் மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் கவாய், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, மத்திய, மாநில அரசுகளிடம் விளக்கம் கேட்டு நோட் டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: