தமிழக பாஜக மாவட்ட தலைவர் தேர்வு தமிழிசை ஆதரவாளர்கள் புறக்கணிப்பு : பொன்.ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் அதிக இடங்களை பிடித்தனர்

சென்னை: தமிழக பாஜ மாவட்ட தலைவர் தேர்வில் பொன்.ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் அதிக இடங்களை பிடித்துள்ளனர். தமிழிசை ஆதரவாளர்கள் அடியோடு புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை தெலங்கானா கவர்னராக கடந்த செப்டம்பம்பர் 1ம் தேதி நியமிக்கப்பட்டார்.  உடனடியாக புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. தலைவர் பதவியை பிடிக்க முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, பாஜக இளைஞர் அணி தேசிய துணை தலைவர் ஏ.பி.முருகானந்தம், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கடும் முயற்சியை மேற்கொண்டு வந்தனர். ஆனால், தலைவரை நியமிப்பதில் கட்சி மேலிடம் தொடர்ந்து சுணக்கம் காட்டி வருகிறது.

இதற்கிடையே கட்சி ரீதியாக உள்ள 60 மாவட்டங்களுக்கான புதிய தலைவருக்கான உள்கட்சி தேர்தல் நடைபெற்றது. இதுவரை 32 மாவட்டங்களுக்கு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 24 மாவட்ட தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது. முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆதரவாளர்கள் அடியோடு புறக்கணிக்கப்பட்டதாக அவரின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இன்னும் உள்ள 28 மாவட்டங்களுக்கான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. விரைவில் அந்த மாவட்டங்களுக்கும் தலைவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதே நேரத்தில் ஆனால், 5 மாதங்கள் ஆகியும் மாநில தலைவர் நியமிக்கப்படவில்லை. அவ்வாறு நியமிக்கப்பட்டிருந்தால் அவர்களிடம் நியாயம் கேட்டிருக்கலாம் என்று தமிழிசை ஆதரவாளர்கள் குமுறி வருகின்றனர். டெல்லி தேர்தல் முடிந்த பின்னர் தமிழக பாஜக தலைவர்கள் நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. அதுவும் இப்போது அதுவும் சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது. தமிழக பாஜகவை டெல்லி மேலிடம் கண்டுகொள்ளவில்லை என்றும் ஒரு தரப்பில் கூறப்படுகிறது.

Related Stories: