நாகர்கோவில் நாகராஜா கோயிலில் தை திருவிழா தேரோட்டம்..பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர்

நாகர்கோவில்: நாகர்கோவில் நாகராஜா கோயிலில் பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுக்க தை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது. நாகர்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற நாகராஜா கோயிலில் அனந்தகிருஷ்ணருக்கு, ஆண்டுதோறும் 10 நாட்கள் தை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தை திருவிழா கடந்த 31ம் தேதி கொடியேற்றத்துடன்  தொடங்கியது. நாளை பிப்ரவரி 9ம் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி தினமும் காலை மற்றும் இரவில் சுவாமி வாகனங்களில் வீதி உலா காட்சி, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், 9ம் திருவிழாவான இன்று (8ம்தேதி) நடந்தது. காலை 7.35 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அனந்தகிருஷ்ணர், பாமா, ருக்மணியுடன் எழுந்தருளினர். பின்னர் சிறப்பு தீபாராதனை உள்ளிட்ட  பூஜைகள் நடைபெற்றது. பின்னர் தேரோட்டத்தை காலை 8.15 மணியளவில் ஆவின் சேர்மனும், கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான அசோகன் உள்ளிட்டோர் வடம்பிடித்து இழுத்து தொடக்கி வைத்தனர். உயர்நீதிமன்ற நீதிபதி  நிர்மல்குமார், அறநிலைத்துறை தலைவர் சிவகுற்றாலம், முன்னாள் நகர பாஜ தலைவர் ராஜன், அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, காரியம் ஆறுமுகதரன், கண்காணிப்பாளர் தங்கம் உட்பட பக்தர்கள் வடம்பிடித்து தேர்  இழுத்தனர்.

தேரோட்டத்தையொட்டி, காலை 10 மணி முதல் அன்னதானமும் நடைபெற்றது. இதிலும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இரவு 9.30க்கு சப்தாவர்ணம் நடக்கிறது. நாளை (9ம்தேதி) 10ம் திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி மாலை  5 மணிக்கு, சுவாமி ஆறாட்டுக்கு எழுந்தருளல், இரவு 7.45க்கு ஆறாட்டு துறையில் இருந்து கொம்மண்டையம்மன், கோயிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் இரவு 9.30க்கு ஆறாட்டுதுறையில் இருந்து சுவாமி, திருக்கோயிலுக்கு  எழுந்தருளல் நடக்கிறது. தேரோட்டத்துக்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் அன்புமணி தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர். தேரோட்டத்தையொட்டி இன்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்பட்டிருந்தது.

பா.ஜ. கோயிலா? அறநிலையத்துறை கோயிலா?

தேரோட்டம் தொடங்கும் முன்னர் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் நகர செயலாளர் சந்துரு உள்ளிட்ட அதிமுகவினர் ஒரு வடத்தை பிடித்தவண்ணம் தொடக்க நிகழ்ச்சிக்கு தயாராக நின்றுகொண்டிருந்தனர். அதற்கு  முன்னதாக பாஜ முன்னாள் நகர தலைவர் ராஜன் தலைமையில் நிர்வாகிகள் மற்றொரு வடத்தை பிடித்த வண்ணம் அதிமுகவினரை மறைத்தவண்ணம் நின்றுகொண்டிருந்தனர். இதனால் தேரோட்டம் தொடங்கும் முன்னர் சலசலப்பு  ஏற்பட்டவண்ணம் இருந்தது. அப்போது அவர்களையும் அதிமுகவினருடன் இணைந்து நிற்க வற்புறுத்தியும் அவர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை.

 இதனால் அதிருப்தியடைந்த அசோகன் உள்ளிட்டோர் வடம் பிடிப்பதை விட்டுவிட்டு அவர்களை வைத்தே நிகழ்ச்சியை நடத்திக்கொள்ளட்டும் இது பிஜேபி கோயிலா? இல்லை அறநிலையத்துறை கோயிலா? என்று அறநிலையத்துறை  அதிகாரிகளை கேட்டு வாக்குவாதம் செய்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.  பின்னர் அதிகாரிகள் மற்றும் நிர்வாகி தேவ் தலைமையில் நிர்வாகிகள் சென்று அவரை சமாதானம் செய்து அழைத்து வந்தனர். பின்னர் அனைவரும் வடம்பிடித்து  தேர் இழுக்க தேரோட்டம் தொடங்கி நடைபெற்றது.

Related Stories: