வடலூரில் தைப்பூச விழா: ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம்...ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

நெய்வேலி: வடலூர் சத்தியஞான சபையில் 149வது தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை  ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மருதூர் என்ற கிராமத்தில் பிறந்தவர் வள்ளலார். வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடி இரக்கத்தின் உச்சமாக பிரகாசித்தவர். இறைவன் ஒளி வடிவில் உள்ளார் என்பதை உலகிற்கு  எடுத்துரைக்கும் வகையில் வடலூரில் சத்திய ஞானசபையை நிறுவினார். மேலும் ஏழை, எளிய மக்களின் பசியை போக்க சத்தியஞான சபை அருகிலேயே தர்மசாலையை நிறுவினார். அன்று முதல் இன்று வரை அன்னதானம் வழங்கப்பட்டு  வருகிறது. பின்னர் வள்ளலார் மேட்டுக்குப்பத்தில் சித்தி பெற்றார்.

வள்ளலார் ஜோதி வடிவானதை யொட்டி நடத்தப்படும் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் ஆண்டு தோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டுவருகிறது. தை மாதத்தில் பூச நட்சத்திரமும்  பவுர்ணமி நாளும் கூடி வரும் நாளில் தைப்பூச ஜோதி தரிசன விழா நடைபெறுகிறது. அப்போது ஏழுதிரைகள் நீக்கி 6 காலங்கள் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். இந்த ஆண்டு 149வது ஜோதி தரிசன விழா நேற்று (7ம்தேதி) கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று காலை 6 மணிக்கு முதல்கால ஜோதி தரிசனம் துவங்கியது. ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்பட்டது. அப்போது  அதிகாலையிலேயே காத்திருந்த பக்தர்கள், ‘அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை’ என்ற மகா மந்திரத்தை முழங்கி ஜோதி தரிசனம் செய்தனர்.

இதனை தொடர்ந்து காலை 10 மணிக்கும், பிற்பகல் 1 மணிக்கும் ஜோதி தரிசனம் நடந்தது.  தொடர்ந்து இரவு 7 மணிக்கும், 10 மணிக்கும் ஜோதி தரிசனம் நடக்கிறது. தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.30 மணிக்கும் ஜோதி தரிசனம் நடை பெறுகிறது.

ஜோதி தரிசனத்தை முன்னிட்டு வடலூரில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இதனால் வடலூர் நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஜோதி தரிசனத்தை முன்னிட்டு அரசு போக்குவரத்து  கழகம் சார்பில் 100க்கும் அதிகமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வள்ளலார் தைபூச ஜோதி தரிசனத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளத்துடன், மது மற்றும் மாமிச கடைகளை மூடவும்  உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏழு திரைகள் ஏன்?

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மனிதத்தன்மை என்ற ஒப்பற்ற ஒளி இருக்கிறது. ஆனால், ஆசை, கோபம், தன்னலம். பொய்மை போன்ற பொல்லாத குணங்கள் பல்வேறு திரைகளாகப் படர்ந்து, அந்த மனிதத் தன்மையை அமுக்கி  மறைத்துவிடுகிறது. இந்தப் பொல்லாத குணங்கள் விலகி, நல்ல நெறியை அடையும்போது மனிதன் தனக்குள் இருக்கும் தெய்வத்தைக் காண்கிறான். ஜோதி தரிசனகாட்சி இது தான். ஏழு திரைகளை நீக்கிய பிறகுதான் தீபத்தின் ஜோதி ஒளியைக்  காண இயலும். கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன்னிறம், வெண்மை, கலப்பு வண்ணம் என ஏழு வண்ணத் திரைகள். அதனால் தான் இன்றும் ஒளிக்காட்சி முன்பு ஏழு வண்ணத் திரைகள் விலக்கப்படுகிறது. திரைகள் விலகியதும் அனல்  பிழம்பாக ஜோதி ஒளிக்காட்சியை கண்ணாடியில் காணலாம்.

Related Stories: