சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் ஏர்செல் முன்னாள் உரிமையாளர் சிவசங்கரனின் ரூ. 224 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

டெல்லி : சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் ஏர்செல் முன்னாள் உரிமையாளர் சிவசங்கரனின் ரூ. 224 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஐடிபிஐ வங்கியில் ரூ.470 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்ததாக சிவசங்கரன் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சென்னை உட்பட பல இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு அசையா மற்றும் அசையும் சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டது.

மேலும் சிவசங்கரனுக்கு சொந்தமான ஏர்ஸல் சன் ஷைன் மற்றும் ஷிவா வெஞ்சர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மூலமாக வங்கி கடன் வாங்கி மோசடி செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த நிறுவனங்களும் வழக்கில் சேர்க்கப்பட்டு அவற்றுக்கு சொந்தமான சென்னையில் உள்ள ரூ.224 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சிவசங்கரனுக்கு சொந்தமான சென்னை திநகரில் இருக்கும் கமர்ஷியல் அலுவலகம், எம்ஆர்சி நகரில் உள்ள நிலம், அலுவலகம் ஆகியவை முடக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சொத்துக்களை யாருடைய பெயருக்கும் மாற்றவோ விற்கவோ முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: