வீட்டுக் காவலில் உள்ள தாய்க்கு சப்பாத்தி நடுவில் ரகசிய கடிதம்: மெகபூபா முப்தி மகள் இதிஜா யுக்தி

புதுடெல்லி: காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் வீட்டுக் காவலில் உள்ள எனது தாய் மெகபூபா முப்தியை தொடர்பு கொள்ள சப்பாத்திக்குள் மறைத்து வைத்து கடிதம் அனுப்பியதாக மகள் இதிஜா தெரிவித்துள்ளார்.  காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டது. அந்த மாநிலத்தை காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதையொட்டி, அப்பகுதியில் உள்ள முக்கிய அரசியல்வாதிகள் முன்னாள் முதல்வர்கள், பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்ளிட்டோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். கடந்த 6 மாதங்களாக வீட்டுக் காவலில் உள்ள அவர்களை விடுவிக்கும்படி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை.

இந்நிலையில், கடந்தாண்டு செப்டம்பரில் பரூக் அப்துல்லாவை மட்டும் பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அரசு கைது செய்தது. நேற்று முன்தினம் மெகபூபா, உமர் அப்துல்லா மீதும் இந்த சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த சட்டத்தின்படி ஒருவரை விசாரணையின்றி 3 மாதங்கள் காவலில் வைக்க முடியும். அதை 2 ஆண்டுகள் வரையிலும் நீட்டிக்க முடியும். தனது தாய் மெகபூபா முப்தி வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட நாள் முதல் அவரது டிவிட்டர் கணக்கை, அவருடைய மகள் இதிஜா பயன்படுத்தி வருகிறார். சிறையில் உள்ள தனது தாயை சமீபத்தில் தொடர்பு கொண்ட விதம் பற்றிய சுவாரசிய தகவலை நேற்று முன்தினம் அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் இதிஜா, ‘எனது தாய் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதை என்னால் விவரிக்க முடியவில்லை. எனது தாயார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. அடுத்த சில நாட்கள் புதிராக கழிந்தன. அப்போது எனது தாய்க்கு கடிதம் அனுப்ப டிபன் பாக்சை பயன்படுத்தினேன்.

வீட்டில் செய்யப்பட்டு எனது தாய்க்கு கொடுத்து அனுப்பப்பட்ட சப்பாத்திக்குள், நான் எழுதிய கடிதத்தை மறைத்து வைத்து அனுப்பினேன்.எனக்கு வந்த பதில் கடிதத்தில், `என்னை சமூக வலைதளத்தை பயன்படுத்தி தகவல் அனுப்ப அவர்கள் அனுமதிக்கவில்லை. அதையும் மீறி சிலர் தகவல் தெரிவித்தால் அவர்கள் மீது ஆள்மாறாட்ட வழக்கு பதிவு செய்யப்படுகிறது. உன்னை அதிகம் தவற விடுகிறேன்’ என எழுதப்பட்டு இருந்தது,’ என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: