நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த மாநில அரசுக்கு தான் அதிகாரம்: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

புதுடெல்லி: நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த கூறும் அதிகாரம் மாநில அரசுக்கு தான் உண்டு என திட்டவட்டமாக தெரிவித்த உச்ச நீதிமன்றம், அது குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை குறித்து முழுமையான விவரங்களை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. குறிப்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை பொறுத்தவரை 4லட்சத்து 3 ஆயிரத்து 176 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது ஒருபுறம் இருக்க கீழமை நீதிமன்றங்களில் 2020 ஜனவரி மாதம் வரையில் 3 கோடியே 19 லட்சத்து 33 ஆயிரத்து 14 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இது இந்திய அளவில் மூன்றாவது இடம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில், வழக்கறிஞர் ஜெய்சுகின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,”தமிழகத்தில் மொத்தம் உயர்நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்கள் என மொத்தம் 30 சதவீதத்திற்கும் மேலான வழக்குகள் நிலுவையில் உள்ளது.  

மேலும் இதுபோன்ற மனுக்களின் விசாரணையின் முடிவில் வழங்கப்படும் உத்தரவையும் மாநில அரசு சரியாக நடைமுறைப்படுத்துவது கிடையாது. அதனால் இதற்காக மாவட்டம் வாரியாக தனிக்குழுவை அமைத்து வரையறைகளை ஏற்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டது. இந்த நிலையில், மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் இந்து மல்கோத்ரா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் ஜெய்சுகின், மனுவில் உள்ள சாராம்சங்களை நீதிபதிகள் முன்னிலையில் எடுத்துரைத்தார். ஆனால் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், இதுகுறித்து எந்த முடிவாக இருந்தாலும்  மாநில அரசு தான் எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் நாங்கள்( நீதிமன்றம்) தலையிட விரும்பவில்லை எனக்கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories: