தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா நடந்த நிலையில் ராஜராஜன் சோழன் உருவம் பொறித்த நாணயம் கண்டெடுப்பு: பெயர் உள்ளதாக தகவல்

சென்னை: ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு நேற்று நடந்துள்ள நிலையில், ராஜராஜ சோழன் உருவம் பொறித்த நாணயம் ஒன்று தற்போது கிடைத்துள்ளது. இது குறித்து சென்னை நாணயவியல் தலைவர்  மணிகண்டன் கூறியதாவது: சோழர் பரம்பரையில் வந்த முதலாம் ராஜேந்திர சோழன்(கிபி1012-1044) காலத்தில் வெளியிட்ட இரண்டு நாணயங்கள் தற்போது கிடைத்துள்ளது. இந்த நாணயங்கள் மாற்றுக்குறைந்த தங்கத்திலானவை. இது போன்ற  சோழர் நாணயங்கள் தற்போதுதான் முதன்முதலாக அறியப்பட்டுள்ளன. ‘யுத்தமல்லா’ என்ற பெயர் ெபாறிக்கப்பட்ட ஒரு நாணயம் கிடைத்துள்ளது. பொதுவாக இதுவரை கிடைத்துள்ள சோழர் நாணயங்களில் வில், புலி, மற்றும் இரண்டு மீன்கள்  பொறிக்கப்பட்ட நிலையில்தான் கிடைத்துள்ளன. இப்போது கிடைத்துள்ளது பெயர் பொறிக்கப்பட்டுள்ள நிலையில் கிடைத்துள்ளது சிறப்பு.

பிற்கால சோழர்கள் வரலாற்றில் மூவேந்தர்களின் சின்னங்களான வில்,புலி, மீன் ஆகியவற்றை முதன் முதலில் நாணயங்களில் பொறித்து அவற்றை அரச இலச்சினைகளாக பொறித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்த அரசன் முதலாம் ராஜேந்திர  சோழன்தான். ஆனால் இந்த நாணயங்களில் அரச இலைச்சினைக்கு பதிலாக நின்ற நிலையில் ராஜராஜ சோழனின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. ராஜேந்திர சோழன் தனது தந்தையின் நினைவாகவும், முதல் வெளியீடாகவும் தன் பெயரிலேயே  நாணயத்தை வெளியிட்டுள்ளான் என்பதற்கு இந்த நாணயங்களே ஆதாரம். இந்த நாணயங்களில் வெளிறிய நிறத்தில் ஒன்று உள்ளது. அதன் முன்பக்கத்தில் நின்ற நிலையில் ராஜராஜ சோழன் உருவமும், நாணயத்தின் பின்பக்கத்தில்  ‘யுத்தமல்லஹ’ என்று இரண்டு வரிகளில் நாகரி எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் எடை 450 மி.கிராம். இது மாற்றுக் குறைந்த தங்கத்தில் உள்ளன.

இரண்டாவது நாணயம் பாசி படர்ந்த நிலையில் காணப்படுகிறது. இந்த நாணயத்தின் முன்பக்கத்தில் ராஜராஜ சோழன் நின்ற உருவமும் இடதுபக்கம் விளக்கு ஒன்றும் உள்ளது. பின் பக்கத்தில் அமர்ந்த ராஜஉருவமும் வலது பக்கத்தில்  ‘ஸ்ரீராஜேந்திரஹ’ என்று மேலிருந்து கீழ்நோக்கி நாகரி எழுத்துகளில் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் எடை 4 கிராம் எடை. இதுவும் மாற்றுக் குறைந்த தங்கத்தில் கிடைத்துள்ளது. இது தற்போது முதன்முதலாக கிடைத்துள்ளது.

Related Stories: