தமிழகம் முழுவதும் அனைத்து திரையரங்குகளிலும் ஆன்லைனில் சினிமா டிக்கெட் விற்பனை விரைவில் தொடக்கம்: அமைச்சர் கடம்பூர் ராஜு அறிவிப்பு

சென்னை: சினிமா டிக்கெட்டை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் நேற்று நடந்தது. உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் சங்கர், மாநில மின்னணு ஆளுமை உறுப்பினர் எம்.சிவகுமார், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் டி.என்.டி.ராஜா, உட்லண்ட்ஸ் வெங்கடேஷ், வி.டி.எல்.சுப்பு, ஐ ட்ரீம்ஸ் மூர்த்தி, சீனு எஸ் பிச்சர்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும் அமைச்சர் கடம்பூர் ராஜு நிருபர்களிடம் கூறியதாவது: 2019 செப்டம்பர் மாதம் முதல் கூட்டம் நடந்தது. அதில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் சினிமா டிக்கெட் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் கொள்கை முடிவை அரசு அறிவித்தது. இதில் திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

 நேற்று கூட்டம் நடந்தது. இதில், ஆன்லைன் டிக்கெட் விற்பனை செய்வதற்கான முடிவை எட்டும் அளவுக்கு உள்ளது. ஆன்லைன் மூலம் மக்களுக்கு குறைவாக டிக்கெட் கிடைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. விரைவில் இது நடைமுறைக்கு வர உள்ளது.

புக் மை ஷோ உள்ளிட்டவைகளில் இருப்பவர்கள் அதிலே இருக்கலாம். அரசு கொண்டு வரும் ஆன்லைன் சேவையிலும் அவர்கள் இருக்கலாம். எவ்வளவு வசூல் ஆகியுள்ளது என்பதையும் தயாரிப்பாளர்கள் இந்த ஆன்லைன் வசதி மூலம் தெரிந்து கொள்ள முடியும். சினிமாவின் வெளிப்படை தன்மையை தெரிந்து கொள்ளலாம்.

தமிழகம் முழுவதும் ஒரே சர்வரில், தமிழகத்தில் மொத்தம் எத்தனை பேர் படம் பார்த்துள்ளனர் என்பதை தெரிந்து கொள்ள முடியும். விரைவில் இது நடைமுறைக்கு வரும். உள்துறை, வணிகவரி, ஐடி ஆகிய துறைகள் இதில் இணைந்துள்ளது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட சிறப்பு காட்சிகளுக்கான சிறப்பு கட்டணத்தையும் அரசே நிர்ணயிக்கும். பண்டிகை காலங்களில் சிறப்பு பஸ், ரயிலுக்கு எப்படி கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறதோ அதுபோன்று, தியேட்டர்களில் வசூலிக்கப்படும். அந்த கட்டணத்தை அரசே முடிவு செய்யும். நடிகர் ரஜனிகாந்த் நடித்த தர்பார் படம் சம்பந்தமாக எந்த தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் அரசை அணுகவில்லை.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: