சபரிமலை சீராய்வு மனுக்கள்; யார் எப்போது வாதிடுவது தொடர்பான நேரம் வியாழக்கிழமை முடிவு செய்யப்படும்; உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மனுக்கள் மீது யார் யார் எப்போது வாதிடுவது தொடர்பான நேரம் வியாழக்கிழமை முடிவு செய்யப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார். கேரள மாநிலம் சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்று கடந்த 2018 செப்டம்பர் 28ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை மறு ஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் 65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதனை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, 7 நீதிபதிகள் அமர்வுக்கு வழக்கை மாற்றி கடந்த ஆண்டு நவ. 14ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 60-க்கும் மேற்பட்ட சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த மாதம் இதனை பரிசீலித்த உச்சநீதிமன்றம் 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது. இதன்படி தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் பானுமதி, அசோக்பூஷன், நாகேஸ்வர ராவ், சந்தான கவுடர், எஸ்.ஏ.நசீர், கவாய், சுபாஷ் ரெட்டி, சூரியகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று சீராய்வு மனுக்கள் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கின் விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்து தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே உத்தரவிட்டார். மறுஆய்வு மனுவை விசாரிப்பதற்கான அமர்வு ஒரு விவகாரத்தை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற முடியுமா என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டியுள்ளதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டதாக தலைமை நீதிபதி தெரிவித்தார். மனுக்கள் மீது யார் யார் எப்போது வாதிடுவது தொடர்பான நேரம் வியாழக்கிழமை முடிவு செய்யப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.

Related Stories: