டெல்லியில் கொரோனா வைரசை தடுக்க ராணுவமும் களம் இறங்கியது : 900 படுக்கை வசதியுடன் சிறப்பு முகாம்கள்

புதுடெல்லி:  நாட்டின் பாதுகாப்பு பணியிலும், எல்லை பாதுகாப்பு பணியிலும் ராணுவமும், துணை ராணுவப் படைகளும் ஈடுபட்டு வருகின்றன. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமாகி வரும் நிலையில், இந்த வைரசால் இந்தியாவில் ஏற்படும் பாதிப்பை தடுக்கும் முயற்சியில் இவையும் களமிறங்கி உள்ளன. சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்காக ஏர் இந்தியா சிறப்பு விமானம் நேற்று புறப்பட்டு சென்றது. இந்த விமானம் இன்று பிற்பகல் 2 மணிக்கு டெல்லி  வந்தடையும். இதில் வரும் 300 பேரை தங்க வைத்து கண்காணிப்பதற்கான சிறப்பு முகாமை,  டெல்லி அருகே உள்ள மனேசாரில் 300 படுக்கை வசதியுடன் ராணுவம் அமைத்துள்ளது.

சிறப்பு விமானத்தில் வருபவர்கள் 2 வாரங்கள் இங்கு  தங்க வைக்கப்பட்டு கொரோனா வைரஸ் பாதிப்பு, அறிகுறி உள்ளதா என மருத்துவ குழு மூலமாக கண்காணிக்கப்படுவார்கள். இவற்றில் ராணுவ மருத்துவர்கள் பணியாற்றுவார்கள். அதேபோல், டெல்லியில் உள்ள சாவ்லா பகுதியில் 600 படுக்கை வசதிகள் கொண்ட சிறப்பு தனிமை மருத்துவ மையத்தை இந்தோ -திபேத் எல்லை பாதுகாப்பு படை அமைத்துள்ளது. இதில், இந்த படையை சேர்ந்த மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க உள்ளனர்.

Related Stories: