கவர்னரை திரும்பப் பெற வலியுறுத்தக் கோரிய கேரள எதிர்க்கட்சிகளின் நோட்டீஸ் நிராகரிப்பு

திருவனந்தபுரம்: கவர்னர் ஆரிப் முகம்மது கானை திரும்ப அழைக்க வலியுறுத்த வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சியினர் அளித்த நோட்டீஸ், கேரள சட்டப்பேரவையில் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, காரசார வாக்குவாதம் நடைபெற்றது. மத்திய  அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கேரள சட்டப்பேரவையில்  தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.  இதற்கு கவர்னர் ஆரிப் முகம்மது கான் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், கவர்னரை  திரும்ப பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.  இந்நிலையில், கேரள சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 29ம் தேதி தொடங்கியது.  அதில் உரையாற்ற வந்த கவர்னருக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தொடர்ந்து நேற்று காலை  சட்டப்பேரவை கூடியது.  எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா பேசும் போது, கவர்னர்  ஆரிப் முகம்மது கானை திரும்ப பெற கோரி தாக்கல் செய்த நோட்டீஸ் தொடர்பாக  விளக்கம் அளிக்க வேண்டும் என்றார். இதற்கு பதில் அளித்த சட்டத்துறை அமைச்சர் ஏ.கே.பாலன், ‘‘ஒரு மாநில கவர்னரை திரும்ப பெற வேண்டும்  என்று மத்திய அரசை கேட்டுக்கொள்ள முடியாது. அதற்கு சட்டத்தில் இடம் இல்லை.  எனவே, எதிர்க்கட்சியின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற  கோரிக்கை குறித்து விவாதித்தால் அரசுக்கும், கவர்னருக்கும் இடையே பிரச்னை  பெரிதாக வாய்ப்பு உள்ளது. இதன்மூலம், ஆட்சியில் குழப்பம் ஏற்படும்,’’ என்றார். இதற்கு  கடும் எதிர்ப்பு தெரிவித்த ரமேஷ் சென்னித்தலா, ‘‘கவர்னரை எப்படி கையாள வேண்டும் என்பதை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை  பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்,’’ என்றார். இதை தொடர்ந்து,  சட்டப்பேரவையில் ேநற்றும் அமளி  ஏற்பட்டது.

அவை குறிப்பில் இருந்து கவர்னர் பேச்சு நீக்கம்

கேரள  சட்டப்பேரவையில் கடந்த 29ம் தேதி உரையாற்ற வந்த கவர்னர் ஆரிப் முகம்மது கானை எதிர்க்கட்சி எம்எல்ஏ.க்கள் தடுத்து போராட்டம் நடத்தினர். சபை காவலர்கள் அவர்களை அப்புறப்படுத்தினர். இது தொடர்பாக சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் நேற்று கூறுகையில், ‘‘ சட்டப்பேரவையில் கவர்னரை எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் தடுத்தது வருத்தம் அளிக்கிறது. ஆனால், போராட்டம் நடத்திய எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க தேவையில்லை. அரசின் கொள்கைகளைத்தான் கவர்னர் அவையில் வாசிக்க வேண்டும். ஆனால், கவர்னர் தனது உரைக்கு முன்னதாக, உரையில் உள்ள சில கருத்துக்களை வாசிக்க தனக்கு விருப்பம் இல்லை. ஆனாலும், முதல்வர் கேட்டுக்கொண்டதால் வாசிக்கிறேன் என்றார். கவர்னரின் இந்த பேச்சு அவை குறிப்பில் இடம் பெறாது,’’ என்றார்.

Related Stories: