குமரி எஸ்எஸ்ஐ வில்சன் கொலையில் போலீஸ் காவல் விசாரணை முடிந்தது: 2 தீவிரவாதிகள் சிறையிலடைப்பு

நாகர்கோவில்: எஸ்.எஸ்.ஐ. கொலையில் கைதான தீவிரவாதிகள் 2 பேரும், போலீஸ் காவல் விசாரணை முடிந்து நேற்று நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, கத்தி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. குமரி மாவட்டம் களியக்காவிளை போலீஸ் சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் வில்சனை (57) சுட்டு கொன்ற வழக்கில் கைதாகி உள்ள அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பேரையும் கடந்த 21ம் தேதி முதல் போலீஸ் காவலில் எடுத்து, டி.எஸ்.பி. கணேசன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். 10 நாட்கள் போலீஸ் காவல் விசாரணை முடிந்ததை தொடர்ந்து இருவரும் நேற்று மாலை 3.30 மணியளவில் நாகர்கோவில் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த விசாரணையின்போது விசாரணை அதிகாரி டி.எஸ்.பி. கணேசன், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி, குண்டுகள், கத்தி, சம்பவத்தன்று அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் மற்றும் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் ஒப்படைத்தார். அதைத்தொடர்ந்து, நீதிபதி அருள்முருகன், போலீஸ் காவலில் ஏதாவது துன்புறுத்தல் இருந்ததா? உணவு சரியாக கொடுத்தார்களா? என தீவிரவாதிகளிடம் கேட்டார். அப்போது அவர்கள் துன்புறுத்தல்கள் எதுவும் இல்லை என்றனர். இதையடுத்து இருவரையும் வருகிற 14.2.2020 வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பின், பாளை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Related Stories: