சிறப்பு பயிற்சி மையங்களில் 5, 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் விவரங்கள் இஎம்ஐஎஸ் இணையத்தில் பதிவேற்றம்

வேலூர்: தமிழகத்தில் சிறப்பு பயிற்சி மையங்களில் படித்தும் வரும் 5, 8ம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை இஎம்ஐஎஸ் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளில் அரசு மற்றும் தனியார், நர்சரி பள்ளிகள் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்டஇயக்குனர் சுடலைக்கண்ணன், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அரசு பொதுத் தேர்வு நடத்த ஆணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஆர்எஸ்டிசி மற்றும் என்ஆர்எஸ்டிசி சிறப்பு பயிற்சி மையங்களில் பயின்று வரும் பள்ளிசெல்லா, இடைநின்ற குழந்தைகள் அனைவரும் இப்பொதுத்தேர்வினை இடர்பாடு ஏதுமின்றி எழுதுவதற்கு ஏதுவாக தகுதியுள்ள மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் இந்த சிறப்பு பயிற்சி மையங்களில் பிற மாநிலங்களை சேர்ந்த இந்தி, பெங்காலி, ஒடியா, தெலுங்கு, மலையாளம் மற்றும் இதர மொழியை தாய்மொழியாக கொண்ட மாணவர்களும் பயின்று வருகின்றனர். இம்மாணவர்களும் இந்த பொதுத்தேர்வினை அவர்களது தாய்மொழியில் அல்லது அவர் விரும்பும் மொழியில் எவ்வித இடர்பாடுமின்றி எழுதுவதற்கு ஏதுவாக தகுந்த முன்னேற்பாடுகளை தேர்வுத்துறை மூலம் முதன்மைக்கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: