தமிழகத்தில் கோடைக்கால முன்னெச்சரிக்கையாக மலைகள், வனப்பகுதிகளில் தீ விபத்தை தடுக்க தன்னார்வலர் குழு: தீயணைப்புத்துறை இயக்குனர் உத்தரவு

வேலூர்: மலைகள், வனப்பகுதிகளில் தீ விபத்தை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த தன்னார்வலர் குழு அமைக்க வேண்டும் என்று தீயணைப்புத்துறை இயக்குனர், மாவட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் கோடைக்காலங்களில் மலை மற்றும் வனப்பகுதிகளில் மர்ம நபர்கள் தீ வைத்து விடுகின்றனர். சில நேரங்களில் வெயிலின் தாக்கத்தினால் மலைகளில் உள்ள காய்ந்த செடிகொடிகள் தீப்பற்றி எரிகிறது. இதனால் மலைகள் மற்றும் வனப்பகுதிகளில் உள்ள அரியவகை மூலிகைகள் எரிந்து வீணாகிவருகிறது. அதேபோல் அரியவகை விலங்குகளும் தீ விபத்தில் உயிரிழந்து போகிறது. சுற்றுலா சார்ந்த வனப்பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டு, மனித உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.

எனவே இந்தாண்டு கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே, மலைகள் மற்றும் வனப்பகுதிகளையொட்டியுள்ள கிராமத்தில் தன்னார்வலர்களை தேர்ந்தெடுத்து குழு அமைக்க வேண்டும். அவர்கள் மூலமாக மலைகள், வனப்பகுதிகளில் ஏற்படும் தீ விபத்தை எப்படி தடுப்பது என்று வரும் பிப்ரவரி 1ம்தேதி முதல் 10ம் தேதிக்குள் விழிப்புணர்வு ஏற்படுத்தி, கோடையில் தீ விபத்துகள் ஏற்படாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீயணைப்புத்துறை இயக்குனர் மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தீயணைப்புத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, வேலூர் மாவட்டத்திலும் மலைகள், வனப்பகுதிகளில் தீ விபத்து ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள தன்னார்வலர் குழு ஏற்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Related Stories: