விதிமுறை மீறிய அதிகாரிகளை கான்ட்ராக்டர்கள் முற்றுகை ரத்து செய்த டெண்டரை மீண்டும் திறந்ததால் ஒப்பந்ததாரர்கள் கொந்தளிப்பு

* போலீஸ் பாதுகாப்புடன் சிலர் மட்டுமே பங்கேற்பு

* 5 கோடி இயந்திரம் 1.50 கோடிக்கு ஏலம்

* பொதுப்பணித்துறையில் சர்ச்சை

சென்னை: தமிழக பொதுப்பணித்துறையின் கீழ் அணை பாதுகாப்பு இயக்ககம் அங்கமான பணிமனை மற்றும் பண்டகசாலை மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. சென்னை தங்கச்சாலையில் உள்ள மிண்ட்டில் இதற்கான அலுவலகம் 14 ஏக்கரில் செயல்பட்டு வந்தது. இதன் மூலம் புதிய ஷட்டர் தயாரிப்பது, அரசு முத்திரை அச்சு தயார் செய்வது உள்ளிட்ட பணிகள் நடந்தது. இந்நிலையில் ஷட்டர் தயாரிப்பது உள்ளிட்ட பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டன. இதைதொடர்ந்து, அங்கு, எந்தவித வேலையும் நடக்காத நிலையில், அந்த பணிமனை பண்டக சாலை மூடப்பட்டது.

இதை தொடர்ந்து, பண்டகசாலையில் மதகுகள் தயாரிப்பதற்கென பல கோடி செலவில் வாங்கப்பட்ட இயந்திரங்கள் பயன்படாமல் உள்ளதால் அவற்றை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த இயந்திரங்களை 1.48 கோடி செலவில் டெண்டர் மற்றும் ஏலம் விடுவது தொடர்பாக கடந்த ஜன.4ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதாவது ஒருபுறம் டெண்டர் போட்டாலும், மறுபுறம் ஏலம் விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விதிமுறைப்படி ஏலம் விடப்பட்ட பிறகுதான் டெண்டர் திறக்க வேண்டும் என்று ஒப்பந்த நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

இதை ஏற்க மறுத்த உயர்அதிகாரிகள், அறிவித்தப்படி நேற்று மாலை 3 மணிக்கு திறப்பதாக அறிவித்தனர். இதற்கு 50க்கும் மேற்பட்ட கான்ட்ராக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து தலைமை பொறியாளர் ராஜேந்திரன், கண்காணிப்பு பொறியாளர் அப்பாஸ் மந்த்ரியை முற்றுகையிட்டனர். இதனால், சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் அணைகள் பாதுகாப்பு இயக்கக அலுவலகம் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

அப்போது கான்ட்ராக்டர்கள், விதிமுறைப்படி ஏலம் விட்ட பிறகுதான் டெண்டர் திறக்க வேண்டும் என்று பொறியாளர்களிடம் கோரிக்கை வைத்தனர். இதனால், அங்கு பெரும் பதற்றமான சூழல் நிலவியதை தொடர்ந்து பண்டகசாலை கண்காணிப்பு பொறியாளர் அப்பாஸ் மந்த்ரி சார்பில் டெண்டர் திறப்பு ரத்து செய்யப்படுவதாகவும், வரும் பிப்ரவரி 12ம் தேதி திறக்கப்படும் என்றும் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதை தொடர்ந்து டெண்டர் திறப்புக்கு வந்த கான்ட்ராக்டர்கள் திரும்பி சென்றனர்.

இந்நிலையில், போலீஸ் பாதுகாப்புடன் திடீரென நேற்று மாலை டெண்டர் திறக்கப்பட்டு, தொடர்ந்து ஏலம் விடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கான்ட்ராக்டர்கள் அங்கு திரண்டனர். அதற்குள் இப்பணிக்கு ஏலம் விடப்பட்டு ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தம் விடப்பட்ட இயந்திரத்தின் மதிப்பு 5 கோடி இருக்கும் என்ற நிலையில் 1.50 கோடிக்கு அதிகாரிகள் தங்களுக்கு வேண்டப்பட்ட நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் விட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பொதுப்பணித்துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: