தமிழகம் முழுவதும் பசு, எருமை பாலில் கல்லீரல், சிறுநீரக பாதிப்பு ஏற்படுத்தும் அப்லாடாக்சின் நச்சு கிருமிகள் கலப்பு: அதிகாரிகள் ஆய்வு

கோவை: கோவையில் விற்பனை செய்யப்படும் பசு மற்றும் எருமை பாலில் கல்லீரல், சிறுநீரக பாதிப்பு ஏற்படுத்தும் அப்லாடாக்சின் நச்சு கிருமிகள் கலந்துள்ளதா? என கால்நடைத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். மாநிலம் முழுவதும் பசு மற்றும் எருமை மாடுகள் சுமார் 93 லட்சத்து 44 ஆயிரம் உள்ளது. சமீபத்தில் மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு அமைப்பு உணவு தொடர்பான ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் மாட்டு பாலில் நச்சு தன்மை இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, நச்சு கலந்த பால் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

தமிழக மாடுகளில் ஏற்படும் கோமாரி ேநாய், தொண்டை அடைப்பான், சப்பை நோய் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு கால்நடை பாராமரிப்புத்துறையின் சார்பில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பால் கறப்பதற்கு முன்பே கலப்படம் காரணமாக நச்சு தன்மை ஏற்படுகிறது என தெரியவந்துள்ளது. மாடுகளுக்கு தீவனமாக புண்ணாக்கு, பருத்திக்கொட்டை, வைக்கோல் போன்றவை அளிக்கப்படுகிறது. இந்த தீவனத்தில் பூஞ்சைகள் உருவாவதால் பாலில் அப்லாடாக்சின் உற்பத்தியாகிறது என கால்நடைத்துறையினர் தெரிவித்துள்ளனர். தென் மாவட்டங்களில் எடுக்கப்பட்ட பால் மாதிரிகளில் அப்லாடாக்சின் நச்சு கிருமி இருந்ததாக கூறப்படுகிறது.

பாலில் அப்லாடாக்சின் அளவு அதிகமானால் விஷமாக மாறும். இந்த பாலை குடிக்கும் நபர்களுக்கு கல்லீரல், சிறுநீரக புற்றுநோய் பாதிப்பு ஏற்படலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், வயிற்று வலி, வயிற்று போக்கு, சளி, காய்ச்சல் போன்ற பிரச்னைகளும் ஏற்படும். இதனை தொடர்ந்து தற்போது தமிழகம் முழுவதும் உள்ள பசுக்கள், எருமைகளின் பால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, கோவை மாவட்டத்திலும் மாடுகளின் பாலில் நச்சு தன்மை உள்ளதா என கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படும் பால், தனியார் பால் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் பால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

Related Stories: