கூடலூர் அருகே கிராமங்களில் மாடுகளை தாக்கும் புலியை கண்காணிக்க வனத்துறையினர் கேமரா பொருத்தினர்

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள மதுரை ஊராட்சிக்குட்பட்ட புத்தூர்வயல், மண்வயல், கம்மாத்தி, கிளிச்செல்லூர் உள்ளிட்ட பகுதிகளில்  கடந்த ஆறு மாதங்களாக இந்த புலி நடமாடுவதாக வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் பல முறை புகார் தெரிவித்தனர். ஆனால் வனத்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த 2 மாதங்களில் இப்பகுதிகளில் இரவு நேரங்களில் விவசாயிகளின் குடியிருப்புகளை ஒட்டி வரும் புலி கொட்டகைக்குள் புகுந்து பசு மாடுகளை அடித்து சாப்பிட துவங்கியுள்ளது. கடந்த 2 மாதங்களில் இதுவரை நான்கு மாடுகளையும் 10க்கும் மேற்பட்ட ஆடுகளையும் கொன்றுள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிளிச்செல்லூர் பகுதியில் வேலாயுதன் மகன் சுரேஷ் என்பவரின் கறவை மாட்டை கொன்ற நிலையில் இன்று காலை அதே பகுதியில் வேணு என்பவரின் மாட்டை வீட்டில் அருகில் இருந்த கொட்டகையில் இருந்து சுமார் 60 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்று கொன்று உள்ளது. மாடுகளைத் தாக்கி வரும் புலி  மனிதர்களையும் தாக்கலாம் என அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இதையடுத்து,  கூடலூர் வனச்சரகர் ராமகிருஷ்ணன் தலைமையில் 5க்கும் மேற்பட்ட வன உழியர்கள் மாடுகளை புலி தாக்கிய பகுதியில் ஐந்துக்கு மேற்பட்ட தானியங்கி கேமரா பொருத்தி புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க துவங்கியுள்ளனர். அந்த புலியானது ஏதேனும் காயங்கள் ஏற்பட்டு அல்லது வயதான நிலையில் இருக்குமானால் அதனை பிடிக்க அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: