இளையான்குடி அருகே அவலம்: புதர் மண்டி கிடக்கும் அரசு பள்ளி விளையாட்டு மைதானம்...மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா?

இளையான்குடி: சாலைக்கிராமம் அரசு மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டு மைதானம் பராமரிப்பு இல்லாததால், மாணவர்களின் விளையாட்டுத்திறன் கேள்விக்குறியாகி உள்ளது என  முன்னாள் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சிவகங்கை மாவட்டம், இளையான்குடி தாலுகா, சாலைக்கிராமத்தில் 1961ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகவும், 1979ம் ஆண்டு முதல் மேல்நிலைப்பள்ளியாகவும் செயல்பட்டு வருகிறது. இளையான்குடி ஒன்றியத்திலேயே முதல் அரசு மேல்நிலைப்பள்ளியாக செயல்படும் இந்த அரசு பள்ளியில், முப்பதுக்கும் மேற்பட்ட கிராமப்புற மாணவர்களே அதிகளவில் பயின்று வருகின்றனர்.

சிறப்பாக செயல்படும் என பெயரெடுத்த இந்த பள்ளியில், விளையாட்டு மைதானம் தற்போது பரிதாபமாக காட்சியளிக்கிறது. முறையான பராமரிப்பு இல்லாததாலும், மாணவர்களை விளையாட அனுமதிக்காததாலும் பளிச்சென இருந்த மைதானம் தற்போது புல், புதர், மண்டி கிடக்கிறது. பல வருடங்களுக்கு முன் மாவட்ட அளவில் விளையாடி பரிசுகள் வாங்கி வந்த இந்த பள்ளி மாணவர்கள், தற்போது ஒன்றிய அளவில்கூட கலந்துகொள்ள முடியவில்லை எனவும், தேவையான தகுதிகள் இருந்தும் முறையான பயிற்சி, ஊக்குவிப்பு இல்லாததால் தகுதியுள்ள மாணவர்கள் முடங்கிப் போயுள்ளனர்.

இதனால் மாணவர்களின் எதிர்கால கனவு சிதைந்துபோகும் என முன்னாள் மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மாணவர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்தும் வகையில், புதர் மண்டியுள்ள பள்ளி மைதானத்தை சீரமைத்து, மாணவர்களின் விளையாட்டுத்திறனை ஊக்குவிக்க முறையான பயிற்றி அளிக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து முன்னாள் மாணவர்கள் கூறுகையில்,‘‘பள்ளியில் விளையாட்டு தினம் கடைபிடிப்பதே இல்லை. முறையான பயிற்சியும், ஊக்குவிப்பும் இல்லாததால் பல கிராமப்புற மாணவர்கள் தகுதியிருந்தும் முடங்கியுள்ளனர். இது குறித்து பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. தொடர்ந்து கல்வித்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொன்டு செல்வோம்’’ என்றனர்.

Related Stories: