பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு ரஜினி வீட்டை முற்றுகையிட முயன்ற திராவிடர் விடுதலை கழகத்தினர் கைது: உருவபொம்மை எரிக்க முயன்றதால் பரபரப்பு

சென்னை: பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க கோரி, அவரது வீட்டை முற்றுகையிட முயன்ற திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த 50 பேரை போலீசார் கைது செய்தனர். போராட்டத்தின் போது உருவப்பொம்மை எரிக்க முயன்றதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசுகையில், 1971ம் ஆண்டு ராமர், சீதைக்கு அவமதிப்பு ஏற்படுத்தியாக பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துகளை பேசினார். இதற்கு திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ரஜினிகாந்த் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் நடிகர் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவிக்காமல், பெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்ட மாட்டேன் என்று அறிவித்தார்.அதைதொடர்ந்து, பெரியார் ஆதரவு அமைப்புகள் சார்பில் போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிட்டு தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

Advertising
Advertising

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று திராவிடர் விடுதலை கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, போயஸ் கார்டன் அருகே போலீசார் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் அறிவித்தபடி திராவிடர் விடுதலை கழகத்தின் சென்னை மாவட்ட தலைவர் உமாபதி தலைமையில் நேற்று காலை 50க்கும் மேற்பட்டோர் செம்மொழி பூங்கா முன்பு பதாகைகளுடன் ஒன்று கூடினர். பிறகு அனைவரும் பேரணியாக நடிகர் ரஜினிகாந்த் வீட்டை நோக்கி முழக்கம் எழுப்பியபடி சென்றனர். அங்கு, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அனைவரையும் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் திராவிடர் விடுதலை கழகத்தினருக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, சிலர் நடிகர் ரஜினிகாந்த் உருவ பொம்மை மற்றும் அவரது படத்தை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றனர். இதை பார்த்த போலீசார் உருவபொம்மை மற்றும் படத்தை போராட்டக்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். எனவே, அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது. அதைதொடர்ந்து போலீசார் அதிரடியாக சாலை மறியலில் ஈடுபட்ட சென்னை மாவட்ட தலைவர் உமாபதி உட்பட 50க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Related Stories: