அயோத்தியில் போலீசாருக்கு சலுகை ஆப் மூலம் விடுப்பு தகவல் அனுப்பலாம்

அயோத்தி: அயோத்தியில் இனி போலீசார் விடுப்புக்காக ஒவ்வொரு அதிகாரியாக சென்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லாமல், ஆப்பிலேயே விடுப்பு கேட்டு தகவல் அனுப்பும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தில் மூத்த போலீஸ் எஸ்.பி.யாக சமீபத்தில் ஆசிஷ் திவாரி பதவியேற்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலை, ஒரு போலீஸ்காரர் அவரிடம் வந்து தனது தாய் இறந்துவிட்டதாகவும், அதற்காக தனக்கு விடுப்பு வேண்டும் என்றும் கூறியுள்ளார். முதல் நாள் இறந்த தாயின் உடலை வீட்டில் வைத்துவிட்டு, விடுப்புக்காக காலையில் இருந்து போலீஸ் ஸ்டேஷன் அதிகாரி, சர்க்கிள் அதிகாரி, கூடுதல் எஸ்.பி. என்று ஒவ்வொருவராக பார்த்து விடுப்புக்கு அனுமதி வாங்கிக் கொண்டு, இறுதியில் மூத்த போலீஸ் எஸ்.பி.யான ஆசிஷ் திவாரியை சந்திக்க வந்துள்ளார். அதாவது தாயின் மரணத்து–்க்கு விடுப்பு கேட்டு, ஒரு நாள் முழுக்க ஒவ்வொரு அதிகாரியாக அனுமதி வாங்கி வந்துள்ளது தெரியவந்துள்ளது.

Advertising
Advertising

அவருக்கு உடனடியாக விடுப்பு அளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார் ஆசிஷ் திவாரி. இதைத்தொடர்ந்து இனி எந்தவொரு போலீசாரும், இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாகக் கூடாது என்பதற்காக ஸ்மார்ட் இ போலீஸ் ஆப்பில், சப்-இன்ஸ்பெக்டர் முதல் சாதாரண போலீசார் வரையில், தங்களுக்கு அவசர காரியங்களுக்கு விடுப்பு கேட்டு தகவல் அனுப்பும் வசதியை ஏற்படுத்தி உள்ளார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘இந்த ஆப்பில் விடுப்பு கேட்டு ஒரு போலீஸ்காரர் தகவல் அனுப்பினால், அது உடனடியாக அவரது அடையாள எண்ணுடன் சரிபார்த்து, அவருக்கான விடுப்பு அளவு உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து, அந்த தகவல்களுடன் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன் அதிகாரிக்கு சென்றுவிடும். இதன் மூலம் அவசர காரியங்களுக்கு விடுப்பு எடுக்கக்கூட ஒவ்வொரு அதிகாரியாக சென்று பார்க்க வேண்டிய நிலை போலீசாருக்கு ஏற்படாது’’ என்றனர்.

Related Stories: