பொங்கல் பண்டிகையையொட்டி மோகனூர் வீரகாரன் கோயிலில் மாடு பூ தாண்டும் நிகழ்ச்சி

நாமக்கல் : பொங்கல் பண்டிகையையொட்டி , மோகனூர் அருகே உள்ள ஊனாங்கல்பட்டி வீரகாரன் கோயிலில் மாடு பூ தாண்டும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நாமக்கல் மாவட்டம் , மோகனூர் அடுத்த ஊனாங்கல்பட்டி, வாழவந்திநாடு, மேலப்பட்டி, பில்லூர்நாடு உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் குறிப்பிட்ட சமூகத்தினர், கடந்த 5 தலைமுறையாக மாடு பூ தாண்டும் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு காப்பு கட்டிய மறுநாள் முதல், ஒவ்வொரு ஊராக சென்று நன்கொடை வசூல் செய்கின்றனர்.

தொடர்ந்து  கிராமத்தில் உள்ள காலி நிலத்தில் கூடும் பொதுமக்கள், ஊர் பெரியவர்கள் முன்னிலையில், மஞ்சள் தூள், ஆவாரம் பூ, கரும்பு, வெற்றிலை பாக்கு ஆகியவற்றை கொண்டு எல்லைக்கோடு அமைக்கின்றனர்.  இதையடுத்து அனைத்து ஊர்களில் ஓட்டிவந்த கோயில் மாடுகளை குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தி, அவற்றுக்கு சிறப்பு பூஜை செய்து, பின்னர் மாடுகளை ஓட விடுகின்றனர்.  அனைத்து மாடுகளும் ஓடிவந்து, எல்லைக்கோட்டில் உள்ள பூக்களை தாண்டிச்சென்றன.

இந்த விழா நேற்று மோகனூர் அடுத்த ஊனாங்கல்பட்டி, வீரகாரன் கோயிலில் நடந்தது. இதில் ஊனாங்கல்பட்டி, சின்னபெத்தாம்பட்டி, குன்னத்தூர், மேலப்பட்டி, மல்லுமாச்சம்பட்டி சேர்ந்த 5 சாமி மாடுகள் பங்கேற்றன. இதில் மூன்று முறை மாடு பூ தாண்டும் போட்டி நடந்தது. அதில், சின்னபெத்தாம்பட்டி சாமி மாடு வெற்றி பெற்றது.

Related Stories: