சுகாதாரமாக தயாரிக்கப்படும் ‘நிவேதனம்’ நெல்லையப்பர் கோயிலுக்கு தரச்சான்று: உணவு பாதுகாப்பு துறை வழங்குகிறது

நெல்லை: தமிழகத்தில் முதன்முதலாக நெல்லையப்பர் கோயிலில் இறைவனுக்கு படைக்கப்படும் நிவேதனத்துக்கு தரச்சான்று வழங்கப்படுகிறது. திருநெல்வேலி எனப்பெயர் வரக் காரணம் கொண்ட பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயில் நெல்லை டவுனில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் கோயிலில் இறைவனுக்கு படைக்கப்படும் நிவேதனம் (நிவேத்யம்) குறித்து  தரச்சான்று வழங்க தனித்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என கடந்த ஆண்டு ஆக.5ம் தேதி தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் நடந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.  

இதுகுறித்து கடந்த 3ம் தேதி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தமிழக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை, அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டமும் நடந்தது.

இதன் அடிப்படையில் உணவு தயாரிப்பதில் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயில் முதலிடத்தில் உள்ளது எனவும், சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோயில் 2வது இடத்தில் உள்ளதாகவும் தரச்சான்று வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைவகம் சார்பில் வருகிற 26ம் தேதி நடக்கும் குடியரசு தின விழாவில் இந்த தரச்சான்று நெல்லையப்பர் கோயிலுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த தரச்சான்றை பெறும் தமிழகத்தின் முதல் கோயில் நெல்லையப்பர் கோயிலாகும் என கோயில் செயல் அலுவலர் யக்ஞநாராயணன்  தெரிவித்தார்.

Related Stories: