தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமில் பொங்கல் விழா: யானைகள் குதூகலம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோயில் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் தமிழக அரசின் இந்து சமய  அறநிலையத்துறை சார்பில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் கடந்த மாதம் 15ம் தொடங்கி நடைபெற்று வருகிறது.முகாமில் 28 யானைகள்  பங்கேற்றுள்ளன. யானைகளுக்கு தினசரி காலை, மாலை 2 வேளையும் நடைபயிற்சி அளிக்கப்படுகிறது. ஷவர் மற்றும் குளியல் மேடைகளில்  பாகன்கள் யானைகளை குளிக்க வைக்கின்றனர்.இந்த நிலையில் முகாமில் நேற்று யானை பொங்கல் கொண்டாடப்பட்டது. நேற்று மாட்டு  பொங்கலைெயாட்டி முகாமில் உள்ள யானைகளுக்கு யானை பொங்கலிடப்பட்டது. முகாமின் அருகே அமைந்துள்ள விநாயகர் கோயில் முன்பாக  யானைகள் நிறுத்தப்பட்டு  புதுப்பானையில் பச்சரிசி, வெல்லம் இட்டு பொங்கல் வைத்தனர்.

பொங்கல் பொங்கி வந்தபோது யானைகள் பிளீறி சத்தமிட்டு பொங்கலை வரவேற்று மகிழ்ந்தன. இந்த யானை பொங்கல் நிகழ்ச்சியை முகாமை  பார்வையிட வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்ந்தனர்.சாடிவயல் கும்கி யானைகள் முகாமில் பொங்கல் கொண்டாட்டம்: கோவை  சாடிவயல் பகுதியில் உள்ள கும்கி முகாமில் பொங்கல் விழா நேற்று நடந்தது. சாடிவயல் கும்கியானை முகாமில் சுயம்பு, வெங்கடேஷ் என்ற 2 கும்கி  யானைகள் தற்போது பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில், கும்கி சுயம்பு மஸ்த்தில் உள்ளது. இந்நிலையில், பொங்கலையொட்டி கும்கி வெங்கடேஷக்கு  அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், விளக்கேற்றி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து பொங்கல் வைக்கப்பட்டது. 2 கும்கி  யானைகளுக்கும் பொங்கல் அளிக்கப்பட்டது. கும்கி யானைகள் பொங்கலை விரும்பி சாப்பிட்டது. யானைகளுக்கு கரும்பு, வெல்லம், பழங்களும்  அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் உதவி வனபாதுகாவலர் செந்தில்குமார்,  போளூவாம்பட்டி ரேஞ்சர் ஆரோக்கியசாமி, வனவர்கள், வனகாப்பாளர்கள்,  மழைவாழ் மக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: