புதுவை அமைச்சர்கள் மீது ஊழல் புகார் தனவேலு எம்எல்ஏ தற்காலிக நீக்கம்

புதுச்சேரி: புதுவை அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கூறிய எம்எல்ஏ தனவேலு கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். புதுவையில் கவர்னர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமி அமைச்சரவைக்கும் இடையே 3 வருடமாக மோதல் நீடித்து வருகிறது. இதனிடையே பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலு, கடந்த வாரம், முதல்வர், அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி, கவர்னர் கிரண்பேடியை சந்தித்து மனு அளித்தார். இதையடுத்து முதல்வர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம் ஆகியோர் டெல்லி சென்று தலைமையிடம் தனவேலு எம்எல்ஏ மீது புகார் தெரிவித்தனர். பின்னர் புதுச்சேரி திரும்பிய  நமச்சிவாயம் நேற்று அளித்த பேட்டியில், “தனவேலு, காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க மாகே சுயேட்சை எம்எல்ஏ ராமச்சந்திரனை சந்தித்து மாற்று ஆட்சிக்கு ஆதரவு தரும்படி கேட்டுள்ளார்.

அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார். என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜகவின் தூண்டுதல் பேரில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான போக்கில் ஈடுபட்டு, கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் தனவேலு தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்’’ என்று அறிவித்தார். அதிகாரம் கிடையாது:  இதுபற்றி தனவேலு கூறுகையில், “என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநில தலைமைக்கு அதிகாரம் இல்லை. அடுத்த வாரம் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோரை சந்தித்து ஊழல் பற்றி தெரிவிப்பேன். அதன் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்காவிட்டால் சிபிஐயிடம் புகார் தெரிவிப்பேன்’ என்றார்.

Related Stories: