சிவகாசி யூனியன் அலுவலகத்தில் பரபரப்பு,..அறைக்கதவை திறக்காமல் அலைக்கழித்த அதிகாரிகள்: ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்ற தலைவர், து.தலைவர் தம்பதி

சிவகாசி:  விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றிய தலைவராக திமுகவைச் சேர்ந்த முத்துலட்சுமியும்,  துணைத்தலைவராக அவரது கணவரும் ஒன்றிய திமுக செயலாளருமான  விவேகன்ராஜும்  தேர்ந்தெடுக்கப்பட்டனர். நேற்று காலை 10 மணியளவில் சிவகாசி யூனியன் அலுவலகத்திற்கு தலைவர் முத்துலட்சுமி, துணைத்தலைவர் விவேகன்ராஜ் மற்றும் திமுக கவுன்சிலர்கள் வந்தனர். அப்போது ஒன்றியத்தலைவர் அறை பூட்டி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதிகாரிகள் வராததால் நீண்ட நேரம் காத்திருந்தனர். பின்னர், யூனியன் அலுவலர்களிடம் சாவி கேட்டபோது, ‘தெரியாது’ என்று கூறிவிட்டனர். அதை தொடர்ந்து யூனியன் கூட்டம் நடக்கும் கூட்டரங்கில் அனைவரும் காத்திருந்தனர். அரை மணிநேரம் கழித்து பிடிஓ வெள்ளைச்சாமி வந்தார். அவரிடம் சென்று திமுகவினர் சாவி கேட்டனர். இதற்கு அவர், ‘‘சாவி என்னிடம் இல்லை. ரெகுலர் பிடிஓ சிவக்குமாரிடம் இருக்கிறது. அவர் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்’’ என்றார். இதையடுத்து 3 மணிநேரமாக யூனியன் அலுவலகத்தில் சாவி இல்லாமல் காத்திருந்த தலைவர் மற்றும் துணைத்தலைவர் தம்பதியும் கவுன்சிலர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Related Stories: